×

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் மூடல்: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை: 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகம் முழுவதும் இரண்டு மணி நேரம் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பின் சார்பில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தில் செயல்படும் பல்வேறு சங்க நிர்வாகிகளின் கூட்டம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை சேர்க்க வேண்டும்.

மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் என மாற்றி அமைக்க வேண்டும். ஊதியத்துடன் மாதம் ரூ.10 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் கல்வி தகுதிக்கு ஏற்ப அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25ம் தேதி ஒருநாள் காலை 10 மணி முதல் 12 மணி வரையில் இரண்டு மணி நேரம் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும். இதேபோல், வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் டாஸ்மாக் பணியாளர்கள் அவரவர் பணிபுரியும் மதுக்கடைகள் முன்பாக 30 நிமிடங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Tags : stores ,Tasmac ,All Trade Union Confederation ,announcement ,Tasmag , 14-point demand, insistence, 25th, Tasmac stores, 2 hours, closure, trade union confederation, announcement
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...