கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் கவனக்குறைவே காரணம்: போலீசார் வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் இறந்த நிலையில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் 14 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கோழிக்கோடு விமான விபத்தில் 18 பேர் இறந்துள்ளனர். ஏராளமானோர் காயங்களுடன் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 91 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 14 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 3 பேருக்கு செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விபத்து குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறையை சேர்ந்த 2 குழுக்கள் விசாரித்து வருகின்றன. கேரள போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்காக மலப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்பி ஷாபு  மேற்பார்வையில் டிஎஸ்பி ஹரிதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விமான நிலையம் அமைந்துள்ள ஹரிப்பூர் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதில் கவனக்குறைவால் தான் விபத்து நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம், விமான விபத்து சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இன்சூரன்ஸ் கிடைக்க வேண்டுமென்றால் போலீஸ் விசாரணை அறிக்கை தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தின் போது விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை நடத்திய விசாரணையின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எப்ஐஆர் நிலம்பூர் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பைலட் விமானத்தை தரையிறக்குவதில் தவறாக முடிவெடுத்ததால் விபத்து நடந்திருக்கலாமோ? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. விமானத்தை வடக்கு பகுதியில் உள்ள 10ம் எண் ஓடுபாதையில் தரையிறக்க முடிவு செய்ததுதான் விபத்துக்கு காரணமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. வழக்கமாக கிழக்குப்பகுதியில் உள்ள 28ம்  எண் ஓடுபாதையில்தான் விமானம் தரையிறக்கப்படும்.

இதுதான் கோழிக்கோடு விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதை. மழைக்காலங்களில் பெரும்பாலும் இங்குதான் விமானங்கள் தரையிறக்கப்படும். ஆனால் இங்கு இறக்காமல் 10ம் எண் ஓடுபாதையில் தரையிறக்கியது ஏன் என்பது தெரியவில்லை. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டறை அறிவுரையின்படி 28ம் எண் ஓடுபாதையில்தான் விமானத்தை பைலட் தரையிறக்க முயற்சித்துள்ளார். ஆனால் தூரப்பார்வை கிடைக்காததால் அங்கு  தரையிறக்காமல் மீண்டும் விமானம் உயரே பறந்து, 2ம் முயற்சியில் 10ம் எண் ஓடுபாதையில் இறக்கி உள்ளார். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 10 நாட்டிக்கல் மைலுக்கு மேல் இருந்துள்ளது. இதுகுறித்து பைலட்டிடம்  தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விபத்தில் சிக்கிய போயிங் 747-800 விமானம் மணிக்கு 15 நாட்டிக்கல் மைல் வரையுள்ள காற்றையும் தாங்கும் வலிமை கொண்டது. இதனால் அவர் 10ம் எண் ஓடுபாதையில் தரையிறக்க முயன்றிருக்கலாம். இதே ஓடுபாதையில் இதற்கு முன்பும் 2 முறை விபத்துக்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

* 300 பேர் தனிமை

கோழிக்கோடு விமான விபத்தில் மரணமடைந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் தனிமையில் செல்லுமாறு,  சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வலியுறுத்தினார். மீட்புப்பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட கலெக்டர் கோபால கிருஷ்ணன், 80  போலீசார், 72 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: