பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் கூட சூப்பர் ஸ்பீடு நத்தை வேகத்தில் டிஜிட்டல் இந்தியா: 4ஜிக்கே தள்ளாடுகிறது; 5ஜி எல்லாம் கனவு தானா?

புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் நாம் அடியெடுத்து கூட வைக்கவில்லை; நாம் இப்போது 5ஜி இன்டர்நெட் வேகம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால், இப்போதுள்ள 4ஜி வேகம் எந்த கதியில் இருக்கிறது தெரியுமா? தெரிந்து கொண்டால் நொந்து போவீர்கள். ஆம், பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் ஆகிய நம்மை விட குட்டி நாடுகள் பராமரிக்கும் வேகம் கூட நம்மிடம் இல்லை என்பதே மெகா சோகக்கதை. இதை சொல்வது யார் தெரியுமா? உலக நாடுகளின் டிஜிட்டல் வேகத்தை கணக்கிட்டு சொல்லும் ‘ஊக்லா’ டிஜிட்டல் சர்வே அமைப்பு. இந்த சர்வதேச அமைப்பு தான் ஒவ்வொரு கால இடைவெளியில் ஒவ்வொரு நாட்டின் டிஜிட்டல் இன்டர்நெட் வேகத்தை கணக்கிட்டு துல்லியமாக சொல்கிறது.

இதன் சமீபத்தில் சர்வே அறிக்கை விவரம்:

* சர்வே செய்யப்பட்ட 138 நாடுகளில் 129வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவை பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் நாடுகள் கூட பின்தள்ளியுள்ளன.

* இந்தியாவில் மூலைமுடுக்கெல்லாம் ஊடுருவியுள்ள டிஜிட்டல் மயம் மூலம் 66 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு 4ஜி டேட்டா வேகம் மிகவும் குறைவாக ஆமையை விட மந்தமான வேகத்தில் உள்ளது.

* 4ஜி டேட்டா வேகம் மிகவும் குறைவாக உள்ளதால் தான் வீடியோ, டேட்டாக்கள் எல்லாம் மிகவும் தாமதமாக அல்லது நடுநடுவே இணைப்பு துண்டித்து பாதிப்பு ஏற்படுகிறது.

* இந்தியாவில் சராசரியாக டேட்டா வேகம் 6.9 முதல் 9.5 வினாடிக்கு எம்பி ஆக உள்ளது. இது மிகவும் குறைவான வேகம். பாகிஸ்தான், இலங்கை, மியான்மர் நாடுகளில் கூட 13.5 முதல் 15 என்று வினாடிக்கு எம்பி கிடைக்கிறது.

* உலக நாடுகளின் டேட்டா வேகம் 34 முதல் அதிகபட்சம் 35 எம்பியாக உள்ளது. ஆனால், இந்தியா அந்த வேகத்தை எட்டக்கூட முடியவில்லை.

* சீனா மூன்றாவது இடத்தில் உள்ளது; மொபைல் டேட்டா வேகம் 133 - 135 எம்பியாக உள்ளது. பிராட்பேண்ட் அலைவரிசையில் 133 எம்பி வரை டவுன்லோடு வேகம் கிடைக்கிறது. இவ்வாறு சர்வே அறிக்கை தெரிவிக்கிறது.

டிஜிட்டல் டேட்டா வேகம் குறைவாக உள்ளது என்பதை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது. ‘தலைநகர் டெல்லியில், டேட்டா வேகம் 10 எம்பியாக உள்ளது; மும்பையிலும் இதே நிலை தான்; கோல்கத்தா பரவாயில்லை; 12 எம்பி வரை கிடைக்கிறது என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தொலைதொடர்பு துறை நிபுணர்கள் கருத்து வருமாறு: ஒரு பக்கம் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் யோசிக்கின்றன. ஏகப்பட்ட மொபைல் இணைப்புகள், பல நிறுவனங்களுக்கு இடையே வர்த்தக போட்டி ஆகியவற்றால் தவிக்கின்றன பல நிறுவனங்கள். குறைந்த கட்டணத்தில் இணைப்பு தந்து விட்டு, போட்ட முதலீட்டை விட அதிகமாக செலவிட்டு ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் தரத்தை பராமரிக்க முடியவில்லை.

ஆப்டிக் பைபர் உட்பட பல விஷயங்களில் பல நிறுவனங்கள் முதலீடு குறைவு தான். இதற்கு மேற்சொன்ன காரணங்கள் முக்கியமானவை. அரசும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்பெக்ட்ரம் விலையை கட்டுப்படுத்த வேண்டும்; 5ஜிக்கு உள்ளாகவாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு இடையே மத்திய அரசும் டிஜிட்டல் இண்டியா மெகா திட்டத்தை அமல்படுத்த தீவிரமாக கிராமங்களில் ஆப்டிக் பைபர் இணைப்புகளை பதிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி பெரும்பாலும் பணிகளை முடித்தும் விட்டது. ஆனால் டிஜிட்டல் வேகத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையான ஒன்று என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எங்கே போகிறது?

* 2016ம் ஆண்டே பாரத் நெட் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்களில் இன்டர்நெட் இணைப்புகள் தருவது என்று மத்திய அரசு மெகா திட்டம் தீட்டியது.

* ஐந்தாண்டு கடந்து 2020ல் 4 லட்சத்து 24,299 கிமீ தூரம் வரை தான் ஆப்டிக் பைபர் கேபிகள்இணைப்பு தரப்பட்டது.

* 1லட்சத்து 50 ஆயிரத்து 29 கிராமங்களில் பைபர் மூலம் இணைப்பு தரப்பட்டது. அதிலும் 1 லட்சத்து 34 ஆயிரம் கிராமங்களில் இன்டர்நெட் சேவை தர எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இதில் 1787 கிராமங்களில் செயற்கைகோள் மூலம் இன்டர்நெட் இணைப்பு தரவும் வசதிகள் செய்யப்பட்டன.

* இ கவர்னனெஸ் என்ற அரசு சேவைகள் எல்லாம் ஆன்லைனில் தரும் திட்டம், கல்வி, விவசாயம், மருத்துவம், கோர்ட் சேவைகள் எல்லாவற்றையும் இ சேவை மூலம் தருவதற்கு தான் இந்த டிஜிட்டல் இண்டியா திட்டம் தீட்டப்பட்டது. இப்படி மத்திய அரசு மெகா டிஜிட்டல் இண்டியா திட்டத்தை அமல்படுத்த தயாராகும் நிலையில், டிஜிட்டல் டேட்டா வேகம் ஆமையை விட மந்தமாக இருப்பின், அரசின் இ சேவைகள் மட்டுமல்ல, டிஜிட்டல் இண்டியா திட்டம் தோல்வி அடைந்து விடும் ஆபத்து உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: