பெய்ரூட் வெடிவிபத்து எதிரொலி லெபனான் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 4ம் தேதி மிகப்பெரும் வெடிவிபத்து நடந்தது. உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த விபத்தில், இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். பெய்ரூட் நகரம் முழுவதிலும் பேரழிவை உண்டாக்கியிருந்த இந்த விபத்து, லெபனான் அரசில் தற்போது கடும் நெருக்கடியினை உண்டாக்கியிருக்கிறது. லெபனான் அரசாங்கத்தின் ஊழலும், நிர்வாகத்திறமையின்மையுமே இந்த சேதத்துக்குக் காரணம் என்று பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் கொந்தளிப்பு உச்சகட்ட நிலையை அடைந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ஹசன் டயப் கடுமையாக அமைச்சர்களைக் கண்டித்ததாகவும், வெடிவிபத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது. அதன் காரணமாக அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த உடனேயே சுற்றுச்சூழல் துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை காலையில், நீதித்துறை அமைச்சர் மேரி க்ளாட் நஜீம் அறிவித்தார். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை நிலவரப்படி மொத்தம் 7 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லெபனானில் எழுந்துள்ள பொதுமக்களின் கிளர்ச்சியை திசை திருப்பவும், முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான பிரதமர் ஹசன் டயப்பின் யுக்தியாகவும் இது இருக்கலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: