மகள் விரட்டியடித்ததால் பிச்சை எடுத்த மாற்றுத்திறனாளி மூதாட்டி காப்பகத்தில் சேர்ப்பு: உதவிக்கரம் நீட்டிய பெண் இன்ஸ்பெக்டர்

பெரம்பூர்: சென்னை தலைமை செயலக காவலர் குடியிருப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அயனாவரம் ஏ.கே.சாமி தெருவில் ரோந்து சென்றபோது, ஒரு கோயில் அருகே பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த மூதாட்டியிடம் சென்று விசாரித்தார். அதில், அவரது பெயர் ஜெயலட்சுமி (67) என்பது தெரியவந்தது. இவரது கணவர் இறந்துவிட, ஒரே ஒரு மகளும் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். ஒரு கை, ஒரு கால் இழந்த இவரை பார்த்துக்கொள்ள முடியாது என வீட்டை விட்டு மகள் வெளியேற்றியதாகவும், சாப்பிட வழியில்லாததால் பிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவரை மீட்டு கொரோனா பரிசோதனை செய்தார். தொற்று இல்லை என தெரிந்ததையடுத்து, அவரை கெல்லீஸ் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி எவ்வளவோ கேட்டுக் கொண்டும் மூதாட்டி ஜெயலட்சுமி அவரது மகள் பற்றிய எந்த தகவலும் கூறவில்லை. அவளாவது சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டும். அவளை எந்த தொந்தரவும் செய்யாதீர்கள் என்று கூறி இன்ஸ்பெக்டருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். பெண் இன்ஸ்பெக்டரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பாராட்டு பெற்று வருகிறது.

Related Stories: