சட்டசபை தேர்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி

சென்னை: சட்டசபை தேர்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி, மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்று தயாநிதி மாறன் எம்பி கூறினார். சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு, கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்ட 66 வட்டங்களில் உள்ள 7000 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, எம்.கே.மோகன் எம்எல்ஏ, மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பகுதி செயலாளர்கள் ஜெ.கருணாநிதி, மா.பா.அன்புதுரை, வேலு, ராமலிங்கம், பரமசிவம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தயாநிதி மாறன் அளித்த பேட்டி:

கொரோனாவை தமிழக அரசு சரியாக கையாளவில்லை. தொடர்ந்து பல கோளாறுகள் இருக்கிறது. கொரோனா மரணக் கணக்கை கூட தவறாக கூறுகிறார்களா என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒழுங்காக கையாண்டு இருந்தால், இந்நேரத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்றைக்கு கொரோனா பற்றி சட்டசபையில் சொன்னாரோ, அன்றே விழித்திருந்து ஒழுங்காக பணியாற்றியிருந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், கட்டுக்குள் கொண்டு வராமல் கடமையை தவற விட்டு விட்டார்கள்.

இ-பாஸ்க்கு பணத்தை வாங்கி வழங்குவது மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்ற செயல் என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது. முக்கியமான நிகழ்வுக்காக இ-பாஸ் கிடைக்காமல் ஒவ்வொருவரும் கஷ்டப்படுகிறார்கள். வெளியூரில் உள்ள தாயையோ தந்தையேயோ, உடன் பிறந்தவர்களையோ சந்திக்க பாஸ் கேட்டால், அதற்கு காசு வாங்கி தருகிற கேவல நிலை, தமிழ்நாட்டில் மட்டும்தான் நடக்கும். இந்த ஆட்சியில் மட்டும்தான் நடக்கும். இதற்கு இந்த ஆட்சியில் உள்ளவர்கள்தான் பொறுப்பு. இதுக்கு தான் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னார். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். அதை கேட்பார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

தமிழகத்தை பொறுத்தவரை அடுத்து யார் வர போகிறார்கள். தேர்தல் நடந்தால் அடுத்த முதல்வர் யார் என்று அனைவருக்கும் தெரியும். தேவையில்லாமல் சின்ன சின்ன சர்ச்சையை செய்து கொண்டிருப்பவர்கள் பாஜவினர். இதை வைத்து என்னமோ அவர்கள் பலம் வாய்ந்த கட்சியாக திகழ்கிறார்கள் என்று ஒரு கற்பனையை ஊக்குவிக்கிறார்கள். அவர்களின் கற்பனை எடுபடாது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அடுத்த தேர்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டி தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவதில் தெளிவாக இருக்கிறார்கள். கனிமொழி எம்பிக்கு மட்டுமில்லாமல், ஒவ்வொரு விமானநிலையத்திலும் இதுபோன்று சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள் எப்படி எல்லாம் அலைக்கழிக்கப்படுவார்கள். இந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்கள் என கூறுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை உரிய இடத்திற்கு எடுத்து செல்வோம். அந்தந்த மாநில மொழி பேசுகிறவர்களை பணியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: