×

கழிவுநீரேற்று நிலைய பணிகள் முடியும் முன்பே முதல்வர் தொடங்கி வைத்த பாதாள சாக்கடை திட்டம்: வீடுகளுக்கு இணைப்பு பெற முடியாமல் மக்கள் தவிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம் மேற்கு பகுதியில் அண்ணாமலை நகர், பாலகிருஷ்ணன் நகர், கார்கில் நகர், சார்லஸ் நகர் போன்ற 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு, பாதாள சாக்கடை வசதி இல்லாததால் மக்கள் தங்களது வீடுகளில் செப்டிக் டேங்க் அமைத்து கழிவுநீரை தேக்கி, பின்னர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதற்கு அதிக பணம் செலவழிக்க வேண்டியுள்ளதால், தங்களது பகுதிக்கு பாதாள சாக்கடை அமைத்து தர வேண்டும், என அப்பகுதி மக்கள் பல ஆண்டாக வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த 2007ம் ஆண்டு  திமுக ஆட்சியின்போது ரூ.88 கோடி செலவில் இப்பகுதியில் பாதாள சாக்கடை அபிவிருத்தி திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்கான பணியை அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதையடுத்து, கழிவு நீரேற்று நிலையம் மற்றும் தெருக்களில் பாதாள சாக்கடை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தன. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தால் பாதாள சாக்கடை திட்ட பணி மந்த கதியிலேயே நடைபெற்றது. இதனால் திட்டப்பணி மதிப்பீடு தற்போது ரூ.128 கோடியை தாண்டியுள்ளது. ஆனாலும் முழுமையாக பணிகள் நிறைவேறவில்லை. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த பாதாள சாக்கடை திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பொதுமக்களுக்கு அர்ப்பணித்து வைத்தார். அப்போது, குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றுவரை மேற்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படவில்லை. விம்கோ நகர் அருகே அமைக்கப்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையம் கட்டுமானப்பணி முடிந்தால்தான் பகுதிகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கப்படும் என்ற நிலை உள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி இதுவரை செயல்பாட்டுக்கு வராமல் முடங்கி உள்ளதால், பல இடங்களில் கழிவுநீர் தெருக்களில் தேங்கி பொதுமக்களும் குழந்தைகளும் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக பாதாள சாக்கடை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் நலனுக்காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த பாதாள சாக்கடை திட்டத்தை, மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள்  விரைவாக செயல்படுத்தாததால் இதுவரை முடியாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பணிகள் முடிக்கப்படாமலயே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது வேடிக்கையாக உள்ளது. எனவே இனியாவது தமிழக முதல்வர் இதுபற்றி விசாரித்து, பாதாள சாக்கடை திட்ட பணியை உடனடியாக முடித்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Chief Minister ,completion ,sewerage station ,houses ,sewer station , Sewage station works, already, starting with CM, underground sewerage project, connection to houses, people suffering
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...