பிஇ நேரடி 2ம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பம் ஆன்லைனில் வெளியீடு: விண்ணப்பிக்க ஆக. 30 கடைசி தேதி; வீட்டிலிருந்தபடி கவுன்சலிங் ஏற்பாடு

காரைக்குடி: பிஇ, பி.டெக் படிப்புகளுக்கான நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலம் நேற்று வெளியிடப்பட்டது. பாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி (கணிதம்) முடித்தவர்கள் பி.இ, பி.டெக் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம். தமிழகம் முழுவதும் உள்ள 465க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் நேரடி சேர்க்கைக்கு என 10 சதவீத இடங்கள் என 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒதுக்கப்படுகிறது. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவங்கள் கொரோனா பாதிப்பால் ஆன்லைன் மூலம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. முதல்நாளான நேற்று மட்டும் 950 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பொறியியல் கல்லூரி முதல்வர் மலையாளமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபா ஆகியோர் தெரிவித்துள்ளதாவது: 30ம் தேதி வரை விண்ணப்பங்களை மாணவர்கள் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். மாணவர்கள் தங்களின் செல்போன் எண், இமெயில் உதவியுடன் பதிவு செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். கொரோனா பாதிப்பில் இருந்து மாணவர்களை பாதுகாக்க முதல்முறையாக இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களின் 5வது செமஸ்டர் வரை உள்ள மார்க் விவரங்களை சமர்ப்பித்தால் போதுமானது. இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து அரசு முடிவு செய்த பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் கடைசி செமஸ்டர் மார்க் பதிவுடலாம். இறுதி செமஸ்டர் பற்றிய விவரம் கிடைத்தவுடன் அடுத்த கட்டத்திற்கான வழிமுறைகள், விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: