அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு வசதிக்காக சென்னை-அந்தமான் இடையே கடலடியில் ஆப்டிக்கல் பைபர்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: சென்னை-அந்தமான் இடையேயான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு வசதிக்காக 2,312 கிமீ தூரத்திற்கு கடலடியில் அமைக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் பைபர் கேபிளை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அந்தமான் நிகோபரில் அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு வசதிக்காக பிரதமர் நரேந்திரமோடி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து, சென்னை-அந்தமான் இடையே 2,312கி.மீ. தொலைவிற்கு கடலுக்கு அடியில் ஆப்டிக்கல் பைபர் கேபிள்கள் அமைக்கப்பட்டன. இதன் மூலம், அதிவேக இணைய சேவை வசதி செய்யப்பட உள்ளது. சுமார் ரூ.1224 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் இதனை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி வீடியோகான்பரன்ஸ் மூலமாக சென்னை-அந்தமான் இடையே கடலுக்கடியில் அமைக்கப்பட்ட ஆப்டிக்கல் பைபர் கேபிளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:

சென்னை-அந்தமான் இடையேயான இந்த திட்டமானது சுற்றுலாதுறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இந்த நாள் அந்தமான் நிகோபர் தீவுக்கு மிகச்சிறந்த நாளாகும். கொரோனா வைரஸ் போன்ற தொற்று நோயினால் நமது வேகத்தை தடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே பிராட்பேண்ட் திட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.  

அந்தமான் மற்றும் நிகோபர் தீவு, நாட்டின் பிற பகுதிகளுடனும், உலகத்துடனும் இந்த திட்டத்தின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. அந்தமான் மக்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் வசதியை வழங்குவது நாட்டின் பொறுப்பாகும். அந்தமான் மக்களுக்கு இது சுதந்திர தினத்துக்காக முன்கூட்டியே வழங்கப்படும் பரிசாகும். இந்த திட்டத்தின் மூலமாக யூனியன் பிரதேசத்தில்ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கல்வி, வங்கி, ஷாப்பிங், ஆன்லைன் மருந்து உள்ளிட்டவற்றை பெற முடியும். மொபைல் மற்றும் இணையவழி தொடர்பான பிரச்னை இன்று தீர்க்கப்பட்டுள்ளது. 1200 பயணிகளை கையாளும் வகையில் போர்ட் பிளேர் விமான நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. திக்லிபூர், கார் நிகோபர் மற்றும் கேம்பெல் பே ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் செயல்பட தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

ரூ.10,000 கோடியில் சரக்கு மாற்று துறைமுகம்

அந்தமானின் கிரேட் நிகோபரில் வங்காளவிரிகுடாவில் சரக்கு மாற்றும் துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சுமார் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்த துறைமுகத்தை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டவுடன் மிகப்பெரிய கப்பல்கள் இந்த துறைமுகத்துக்கு வந்து செல்லலாம். இந்த துறைமுகமானது மிகப்பெரிய கப்பல்கள் நங்கூரமிடுவதற்கும், கடல் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்துவதற்கும், புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

* அதிகாரப்பூர்வ தகவலின்படி போர்ட் பிளேயரில் இன்டர்நெட் வேகம் வினாடிக்கு 400ஜிபியாக இருக்கும். மற்ற தீவுகளுக்கு இது விநாடிக்கு 200ஜிபியாக இருக்கும்.

* கடலுக்கு அடியில் கேபிள் அமைப்பதற்கான இந்த பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனமானது 24 மாதங்களுக்கும் குறைவான கால அவகாசத்தில் செயல்படுத்தி முடித்துள்ளது.

* போர்ட் பிளேரை தவிர ஸ்வராஜ் தீப், லாங் ஐலேண்ட் ரான்கத், லிட்டில் அந்தமான், கமோர்டா, கார் நிகோபர் மற்றும் கிரேட்டர் நிகோபர் ஆகிய தீவுகளும் அதிவேக ப்ராட் பேண்ட் இணைப்பு வசதியை பெறுகின்றன.

Related Stories: