சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்கு எதிர்ப்பு கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

உத்திரமேரூர்: சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடக்கின்றனர். இதையொட்டி, எட்டு வழி பசுமை சாலையால்  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், விவசாய கிணறுகள், வீடுகள், நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகள் என கிராம மக்கள் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தை முற்றிலும் இழக்கும் அபாயம் உள்ளது. அரசின், எட்டு வழி பசுமை சாலை திட்டத்துக்கு தடைவிதிக்க கோரி விவசாயிகள், தன்னார்வலர்கள் என பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில் அரசின் கையகப்படுத்தும் அறிவிப்பாணை செல்லாது என தீர்ப்பு வெளியானது. இதையடுத்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் அடுத்த சீத்தாவரம் கிராமத்தில் எட்டு வழி பசுமை சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் சீத்தணஞ்சேரி, சாத்தணஞ்சேரி, பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது குடும்பத்துடன் 8 வழி பசுமை சாலைக்காக பறிபோகும் நிலங்களில் நின்று கொண்டு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது, எட்டு வழி பசுமை சாலை அமைத்திட சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசை கண்டித்தும், இந்த திட்டத்தை கைவிட கோரியும், மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற கோரியும் கோஷமிட்டனர்.

* அரசுகளுக்கு கண்டனம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் நேரு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மின்சார திருத்தச்சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளை பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம், வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் ஆகியவற்றை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கோஷமிட்டனர். வட்ட செயலாளர் லாரன்ஸ், நிர்வாகிகள் வசந்தா ராஜேந்திரன் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவாசாயிகள் சங்கம், இந்திய தொழிற்சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மோகனன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாஸ்கர், விவசாயிகள் சங்கப் பொறுப்பாளர் வி.கே.பெருமாள், நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, எட்டியப்பன், கெம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: