×

சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து தனியார் கம்பெனி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்: குடும்பத்துடன் 5 மணி நேரம் போராட்டம்; மறைமலைநகர் அருகே பரபரப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் தொழிற்பேட்டையில், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு 150 பேர் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு, கடந்த 7 மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், எவ்வித முன்னறிவுப்பும் இல்லாமல், பலரை பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தொழிலாளர்கள், பலமுறை கம்பெனி நிர்வாகத்திடம் பேசியும், எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், தொழிற்சாலை நிர்வாகத்தின் போக்கை கண்டித்து, தொழிலாளர்கள் நேற்று காலை கம்பெனி நுழைவாயில் முன்பு குடும்பத்துடன் திரண்டனர்.

பின்னர், சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, கடந்த 7 மாதமாக சம்பளம் தரவில்லை. முன் அறிவிப்பின்றி பலரை பணிநீக்கம் செய்தனர். அனைவருக்கும் சம்பள பாக்கியை உடனே தரவேண்டும். பணிநீக்கப்பட்டவர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என கூறினர். இதனால்,  போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், தொழிற்சாலை நிர்வாகிகள், போலீசார் மற்றும் தொழிலாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நிர்வாகம் சார்பில், சம்பள பாக்கியை பாதியாக குறைத்து வழங்குவதாகவும், விரைவில் பணியில் இருந்து நீக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, 5 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags : administration ,company ,Maraimalai Nagar ,road blockade , Salary, management, condemnation, private company workers, road block, family, 5 hour struggle
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...