திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகல தொடக்கம்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடிகிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிற்கான ஆடிகிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா ஆடி அஸ்வினுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா என மொத்தம் ஐந்து நாட்கள் நடக்கும். இந்த விழாவிற்கு, தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல மாநிலங்களில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து முருகனை வழிபடுவர்.

மேலும் சில பக்தர்கள் அலகு குத்தி வழிபடுவர். ஆனால் தற்போது கொரோனா பரவலால் அமலில் உள்ள ஊரடங்கால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள் ஆன்லைனில் தரிசிக்கலாம். இந்த விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நேற்று நடைபெற்றது. இன்று ஆடிபரணி விழா நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை, ஆடிகிருத்திகை விழா மற்றும் அன்று இரவு மலைக்கோயில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சரவணபொய்கையில் தெப்பத்தில் வள்ளி, தெய்வானை ஆகியோருடன் யூடியூப் சேனல் மற்றும் கோயில் வெப்சைட்டில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

உற்சவப்பெருமான், சண்முகர், ஆபத்சகாய விநாயகர் ஆகிய சன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 13ம் தேதி இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவும், 14ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. மேலும் தெப்பத் திருவிழாவும் நடத்துவதற்காக மலைக்கோவில மண்டபத்தில் மினி குளம் அமைத்து அதில் தெப்பத் திருவிழா நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர்,  இணை ஆணையர் பழனி குமார் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் செய்து வருகின்றனர்.

Related Stories: