×

பெண் கொடுக்க மறுத்ததால் தம்பதி அடித்து கொலை? தூக்கில் தொங்கிய சடலங்கள் மீட்பு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (57). இவரது மனைவி பாக்கியம் (50). தம்பதிக்கு அலமேலு (33), சந்தியா (27) மற்றும் ரோசி (25) என்ற 3 மகள்கள் உள்ளனர். அலமேலு, சந்தியா ஆகியோருக்கு திருமணமாகிவிட்டதால் கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.கே.பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பணியாற்றும் ரோசிக்கு, ராஜாநகரத்தை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 3 மாதத்துக்கு முன் ரோசி, கணவனிடம் இருந்து விவகாரத்து பெற்றதாக தெரிகிறது.

இதற்கிடையில், கோரகுப்பம் பகுதியை சேர்ந்த விவாகரத்து பெற்ற சரவணன் (36) என்பவரை ரோசி காதலித்து வந்த காரணத்தால் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தாய் வீட்டுக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ரோசியை பெண் கேட்டு, சரவணனின் தந்தை முனிரத்தினம், தாய் துர்கா மற்றும் உறவினர்கள் ஏழுமலையின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, பெண்ணின் பெற்றோர், “சரவணனுக்கு பெண் தரமாட்டோம்’’ என்று கூறியதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து, வீட்டின் அருகே உள்ள கிணற்று பகுதியில் நேற்று ஏழுமலை, பாக்கியம் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை சரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், எஸ்.ஐ ரவிச்சந்திரன் தலைமையில் பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் ஏழுமலை, பாக்கியம் சடலத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏழுமலையின் மருமகன் கொடுத்த புகாரில், “மாமியார், மாமனார் ஆகியோர் சாவில் மர்மம் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஏழுமலையின் மகள் ரோசி, சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மகளால் அவமானம் அடைந்து தற்கொலை செய்துக்கொண்டார்களா? அல்லது பெண் கொடுக்க மறுத்த பிரச்னையில் தம்பதியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : death ,Recovery , Woman refuses to pay, couple, beaten to death, hanging corpses, rescue
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...