×

10ம் வகுப்பு தேர்வு முடிவு அறிவிப்பு தேர்ச்சி பட்டியலில் 5 ஆயிரம் பேர் இல்லை: மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று காலை 9.30மணிக்கு வெளியானது. அதில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாவட்ட வாரியாக பட்டியலையும் கல்வித்துறை வெளியிட்டு இருந்தது. அதே சமயம் 5 ஆயிரம் மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைத்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. மேலும் மதிப்பெண் நிர்ணயித்தலிலும் பெரிய அளவு குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 27ம் தேதி தொடங்கி இருக்க வேண்டும்.

ஆனால் முக்கியமான தேர்வு என்பதால் பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தியே தீர வேண்டும் என்று தமிழக அரசு உறுதியாக இருந்தது. ஆனால் இது அப்பாவி மாணவர்களை கொரோனா பிடியில் சிக்க வைக்கும் ஆபத்து உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில் கடந்த மாதம் மாவட்டங்களில் கொரோனா அதிகரித்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைவரும் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்வித்துறை, மாணவர்களின் வருகை, அரையாண்டு, காலாண்டு தேர்வின் அடிப்படையில் மதிப்பெண் நிர்ணயித்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் நேற்று காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது. அதில், ‘‘பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 12,690 பள்ளிகளில், 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவ மாணவியர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் மாணவியர் 4 லட்சத்து 68 ஆயிரத்து 70 பேர், மாணவர்கள் 4 லட்சத்து 71 ஆயிரத்து 759பேர். மொத்த தேர்ச்சிவீதம் 100 சதவீதம். இவர்கள் தவிர 6,235 மாற்றுத் திறனாளிகளும் இந்த தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பித்தவர்கள் அனைவைரும் தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மாணவர்கள் பெயர் மாயம்: தமிழக தேர்வுத்துறையில் குறிப்பிட்டு இருந்த தேர்ச்சி அடைந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கும், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய எண்ணிக்கையில் அதாவது 5,177 மாணவர்களின் பெயரையே காணவில்லை. ஆல் பாஸ் என் அறிவித்துவிட்டு 5 ஆயிரம் பேரின் முடிவுகள் வெளியாகததால் மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் குழப்பம் அடைந்தன. இது குறித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில்,
* தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த மாணவர்கள் 9,45,77.
* தேர்வுக்கு முன் இறந்த மாணவர்கள் 231.
* இடைநின்ற மாணவர்கள் 658.
* காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வராதவர்கள் 4359. இதன்படி 5,248 மாணவர்கள் தவிர மீதம் உள்ள 9,39. 829 பேரின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று தேர்வுத்துறை கூறியது.

தவித்த தனித் தேர்வர்கள் பள்ளியில் படித்து ரிசல்ட் வராமல் 5,248 மாணவர்கள் குழப்பத்தில் உள்ள நிலையில், அவர்களின் எதிர்காலத்தை நினைத்து அவர்களது பெற்றோர் கவலைப்பட்டுள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் 10,742 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கும் ரிசல்ட் வரவில்லை. இதனால் இவர்கள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர். காரணம், இவர்கள் பருவத் தேர்வுகளை எழுதவில்லை. இவர்களுக்கு வருகைப் பதிவேடும் இல்லை. இதன் அடிப்படையில் தான் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனித் தேர்வர்களின் தேர்ச்சி எதை அடிப்படையாக வைத்து அறிவிப்பார்கள் என்று மாணவர்களும், பெற்றோரும் கவலையை வெளிப்படுத்தினர். எப்போது முடிவுகள் வெளியாகும் என்பது குறித்தும் தெரிவிக்காமல் விட்டதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

* குறைந்த மதிப்பெண்ணால் குளறுபடி
விடைத்தாள் கேட்ட தேர்வுத்துறையின் எதிர்பாராத அறிவிப்பால், அரசு உள்பட அனைத்து வகை பள்ளிகளும் ஆட்டம் கண்டன. காரணம் பல பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் இல்லை. சில பாட ஆசிரியர்கள் மாணவர்களிடமே அவள் அல்லது அவன் தேர்வுக்கு வந்தானா, எத்தனை மார்க் எடுத்தான் என்று கேட்டு கல்வித்துறைக்கு அனுப்பி வைத்தனர். பல மாணவர்கள் இறுதி தேர்வை குறி வைத்து படித்து வந்ததால் பருவத் தேர்வுகளில் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் நேற்று வந்த ரிசல்ட், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் பள்ளியின் கடைசி பெஞ்ச் மாணவனும், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும் 20 முதல் 30 மதிப்பெண்களே வித்தியாசம் இருந்தது. இதனால் நன்றாக படிக்கக் கூடிய மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அழுதனர். அவர்களை பெற்றோர், பள்ளி நிர்வாகங்கள் தேற்றியது. சில பள்ளிகளில் பருவத் தேர்வில் 1 முதல் 34 வரை மதிப் பெண் பெற்ற மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இது நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் தோல்வி முகத்தில் இருந்து சுமார் 2 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

* மதிப்பெண் எப்படி?
மாணவன் வருகை பதிவேடு முக்கியம், அதற்கு 20 மதிப்பெண். காலாண்டு, அரையாண்டு தேர்வில் பங்கேற்றால் 80 மதிப்பெண் வழங்கப்பட்டது.

* மதிப்பெண் பட்டியல் பெறுவது எப்படி?
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குறைகள் இருந்தால், 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல, 17ம் தேதி முதல் 21ம் தேதிவரை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் தங்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

Tags : 10th Class Exam Results Announcement ,parents , 10th class, exam results, pass list, no more than 5 thousand students, parents, shock
× RELATED பேரணி மூலம் பெற்றோர்களுக்கு...