கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இருவரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கக்கடத்தலில் இருவருக்கும் பங்கு உண்டு என்பதற்கு ஆதாரம் உள்ளதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஃபாசில் ஃபரீத் உள்பட மேலும் 2 பேரிடம் விசாரணை நடத்தத் துபாய் சென்றுள்ளனர். கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்களாக இதுவரை சரித், ஸ்வப்னா சுரேஷ், ஃபாசில் ஃபரீத், சந்தீப் நாயர் உள்ளிட்டோர் மீது என்ஐஏ வழக்குப் பதிவு செய்துள்ளது. அதேபோல் இந்த வழக்கின் பின்னணியில் மாநில அரசின் முக்கியப் பொறுப்பில் அதிகாரிகள் சிலர் இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனினும் அது தொடர்பாக எந்தவொரு ஆதாரமும் இதுவரை சேகரிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே வழக்கின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஃபாசில் ஃபரீத் என்பவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். துபாயில் அரபு அமீரக நிர்வாகிகளின் காவலில் ஃபாசில் ஃபரீத் இருந்து வருகிறார். ஃபாசில் ஃபரீத் துபாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஃபாசில் ஃபரீத்திடம் விசாரணை நடத்த அதிகாரிகள் குழு ஒன்று துபாய் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Related Stories: