×

விளை பொருட்களை மார்க்கெட் கொண்டு வருவதில் தொடர் சிக்கல்; அரசு பஸ்களை இயக்க விவசாயிகள் கோரிக்கை: கூடுதல் செலவாவதாக குமுறல்

நெல்லை: அரசு பஸ்கள் இயக்காமல் முடக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் விளை பொருட்களை மார்க்கெட்டிற்கு கொண்டு வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம்தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வரும் 31ம்தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து முழுவதும் முடக்கப்பட்டன. 5வது ஊரடங்கின்போது மண்டலங்களுக்கு இடையில் 5 சதவீத பஸ்களை ஜூன் மாதத்தில் இயக்க அரசு அனுமதி அளித்தது. ஜூன் மாதம் முழுவதும் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணித்த பயணிகளுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்து பஸ்கள் மீண்டும் முடக்கப்பட்டன. தற்போது அடுத்தகட்ட ஊரடங்கில் தொழிற்சாலைகள், காய்கறி மளிகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், மார்க்கெட்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டன.

இதில் காய்கறி மார்க்கெட்டுகள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை திறந்து விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் பெரும்பாலானவை கிராமபுறங்களில் இருந்துதான் கொண்டு வரப்படுகின்றன. இதற்காக நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் காலை மற்றும் மாலையில் ேதாட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள கத்தரி, வெண்டை, அவரை, சீனி அவரை, தக்காளி, பச்சமிளகாய், பாகற்காய், புடலங்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளை தொழிலாளர்கள் மூலம் பறித்து சுத்தப்படுத்தி மூட்டைகளில் கட்டிவைத்து அரசு பஸ்களில் கொண்டு வருவது வழக்கம். இதேபோல் பாவூர்சத்திரம், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  சேனை, கருணை, பீட்ரூட் உள்ளிட்ட கிழங்கு வகைகள், வாழைக்காய், வாழை இலைகளையும் மார்க்கெட்டிற்கு கொண்டு வருவர்.

தற்போது அரசு பஸ்கள் சுமார் 5 மாதங்களாக இயக்கப்படாத நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை கிராமபுறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் கூடுதல் பணம் செலவு செய்து சிறிய சரக்கு வாகனங்களில் காய்கறி மூட்டைகளை கொண்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது ஏற்றத்தில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை காரணம் காட்டி சரக்கு வாகனங்கள் கூடுதல் வாடகை கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் காய்கறிகளை மாவட்டம் விட்டு மாவட்டம் கொண்டு வருவதிலும் வாகன ஓட்டிகள் இ பாஸ் தொந்தரவாலும் வர மறுத்துவிடுகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் போதிய அளவு காய்கறிகளை கொண்டு வந்தாலும் போலீசார் இடைமறித்து அபராதம் விதிக்கும் நிலையும் காணப்படுகிறது.

இதற்கெல்லாம் முடிவு கட்ட அரசு பொது போக்குவரத்தை விரைவில் துவங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் கூடுதல் பணம் செலுத்தி காய்கறிகளை மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதிலும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு வாகன கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. கிராமபுறங்களில் இருந்து காய்கறிகளை அரசு பஸ்களில் ஏற்றி கொண்டுவந்து விற்பனை செய்த காலத்தில் நல்ல லாபம் கிடைத்தது. தற்போது போக்குவரத்துக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Products, markets, government buses, farmers
× RELATED ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம்: ஐகோர்ட் யோசனை