×

சிவகிரி பகுதியில் பலத்த சூறாவளியால் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்: நஷ்டஈடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

சிவகிரி: தென்காசி மாவட்டம் சிவகிரி மற்றும் தேவிபட்டணம் பகுதியில் பலத்த சூறாவளி காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், சின்னாடப்பேரி, விஜயரங்கபேரி, வழிவிழிகுளம் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, வாழை, கொய்யா, தேக்கு, கரும்பு உள்ளிட்டவைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தொடர் சாரல்மழை காரணமாக இப்பகுதிகளில் அடிக்கடி காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

திடீரென இப்பகுதியில் ஏற்பட்ட சூறாவளி காற்றின் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமாகி கீழே விழுந்தன. இதனால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் சேதமாகி இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகளும் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின் கம்பங்கள் சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சிவகிரி மற்றும் தேவிபட்டணம் ஊருக்குள் மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. விவசாய பகுதிகளில் மட்டும் தொடர் மழை காரணமாக மின்கம்பங்கள் சீரமைப்பு பணி காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

சூறாவளி காற்றினால் சேதமான விவசாய பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் இதேபோன்று கன மழை, சூறாவளி காற்றில் விவசாய பயிர்கள் சேதம் ஏற்பட்டதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அக்கோரிக்கையை ஏற்ற அரசு ஒரு சில விவசாயிகளுக்கு மட்டும் நஷ்டஈடு வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தற்போது அதுபோல் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நஷ்ட  ஈடுவழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : area ,Sivagiri , Sivagiri, heavy hurricane, trees, power poles, damage
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...