நாடு முழுவதும் பருவமழை தீவிரம்: 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் வெள்ள நிலை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிராவில் கனமழை பெய்கிறது. கர்நாடக மாநிலத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள், பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் அதிக மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. பல பகுதிகளில் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருக்கின்றன.

இடுக்கி மாவட்டத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மூணாறில் கடும் மழை, நிலச்சரிவு ஏற்பட்டு 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ள நிலை குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்தும் 6 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கர்நாடகா, மகாராஷ்டிர, கேரளா, உத்தர பிரதேசம், அசாம், பிஹார் ஆகிய 6 மாநில முதல்வர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: