இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.  இந்தியாவில் தற்போது கொண்டு வரப்பட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த திமுக எம்.பி.,கனிமொழி, நேற்று விமான நிலையத்தில் இருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் என்னிடம் பேசும்படி அறிவுறுத்தினேன். அதற்கு அவர் என்னை நீங்கள் இந்தியரா? என்று வினவினார். இந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை உருவானது எப்போது என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுக எம்.பி.,கனிமொழி புகாரையடுத்து, சிஐஎஸ்எஃப் அதிகாரியை விசாரணை நடத்த சிஐஎஸ்எஃப் உத்தரவிட்டுள்ளது. இவ்விகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இவ்விகாரத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியரா? என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கனிமொழியை எம்.பி.யை பார்த்துக் கேட்டுள்ளார்.  இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!, என கூறியுள்ளார்.

Related Stories: