நடப்பு பருவமழை காலத்தில் கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி!!

புதுடெல்லி : கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலியாகி உள்ளனர். மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெய்து வரும் பருவமழையால் பல மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்களுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படாததால், அவர்களுக்கும் கொரோனா ெதாற்று பரவி வருகிறது. சமூக இடைவெளி பராமரித்தல் மற்றும் பிற கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது  மாநிலங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பீகாரில் சுமார் 69 லட்சம் மக்களும், அசாமில் 57 லட்சமும் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்கள், கால்நடைகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மாநில அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் 141 குழுக்களை மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 16 மாநிலங்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி சுமார் 900 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மேற்கு வங்கத்தில் மட்டும் 239 பேர் இறந்துள்ளனர். அசாமில் 136 பேர், குஜராத்தில் 87 பேர் மற்றும் கர்நாடகாவில் 74 பேர், மத்திய பிரதேசத்தில் 74 பேர் இறந்துள்ளனர். அசாமில் 136 பேர் வெள்ளத்தில் சிக்கியும், குறைந்தது 26 பேர் நிலச்சரிவுகளால் இறந்துள்ளனர். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், ஒரே நாளில் 48க்கும் மேற்பட்ட மக்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை.

Related Stories: