×

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி..: தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வலியுறுத்தல்!

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால், இந்தியாவில் இதுவரை 22,15,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 62,064 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின்  மொத்த எண்ணிக்கையானது 22,15,074 ஆக உயர்ந்துள்ளது. இதில் 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வரும்  நிலையில்,15,35,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 1007 உயிரிழப்புக்கள் பதிவாகி  உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 44,386 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பினும் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறி, மீண்டும் பழைய நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

பலரை உயிரிழக்க செய்துள்ள இந்த கொடிய வகை கொரோனா வைரஸால் இதுவரை சாமானியர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அந்த வகையில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும்(வயது 85) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை பிரணாப் முகர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், வேறு சில உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன், என கூறியுள்ளார்.



Tags : Pranab Mukherjee ,Corona , Former President, Pranab Mukherjee, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...