×

கொரோனாவால் வெளியூர் ஆர்டர்கள் வரவில்லை விநாயகர் சிலை தயாரிப்பு மானாமதுரையில் சுணக்கம்: இந்த ஆண்டு நடைபெறுமா சதுர்த்தி நடக்குமா?

மானாமதுரை, ஆக.10: கொரோனோ காரணமாக வெளியூர்களில இருந்து ஆர்டர்கள் கிடைக்காததால் மானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அனைத்து பகுதிகளிலும், பலவிதமான விநாயகர் சிலைகள் அதிகபணம் செலவழித்து வாங்கப்பட்டு, பூஜை செய்து, நீர்நிலைகளில் விஜர்சனம் செய்வது வழக்கம். நகரப்பகுதிகள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும், விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கி பூஜை செய்து வந்தனர். இதற்காகவே வியாபாரிகள் பலர், களிமண், ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ் ரசாயன பவுடரால் தயார் செய்யப்பட்ட, ஒரு அடி முதல், பத்து அடி,இருபது அடி உயரமுள்ள, பல வண்ணங்கள பூசப்பட்ட விநாயகர் சிலைகளை தயாரித்து, விற்று வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பக்தர்கள் பிரதிஷ்டை செய்து வணங்குவது வழக்கம். இந்தாண்டு ஆக.22 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் உலகத்தையே மிரட்டி வரும், கொரோனோ தமிழகத்திலும் தீவிரமடைந்துள்ளதால் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்களிடமும், வியாபாரிகளிடமும், விநாயகர் சிலை தயாரிப்பாளர்களிடமும் எழுந்துள்ளது.

மேலும் வேகமாக பரவி வரும் கொரோனாவை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் சிறிய கோயில்கள் முதல் பெரிய கோயில்கள் வரை பக்தர்களின் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு கோயில்கள் மூடப்பட்டன. முக்கிய உற்சவங்கள் பக்தர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது. அதிகளவில் மக்கள் கூடும் பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவது தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கோயில்களை பழையபடி திறப்பதற்கு, அரசிடமிருந்து எந்த உத்தரவும் முழுமையாக வராத நிலையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது கேள்விக்குறியாக உள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில் மானாமதுரையில் விநாயகர் சிலை செய்யும் இடங்களில் சிலைகளை வாங்குவதற்கான ஆர்டர் சூடுபிடிக்கவில்லை. விநாயகர் சிலை தயாரிக்கும் மண்பாண்ட கலைஞர்கள் விநாயகர்சிலை தயாரிக்கும் பணியில் பெருமளவில் ஈடுபடவில்லை.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ``ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அதிகளவில் விநாயகர் சிலை விற்போம். இரண்டு மாதங்களுக்கு முன்பு, விநாயகர்சிலை தயாரிக்கும் பணியை துவக்கி விடுவோம். ஆனால், இந்தாண்டு இதுவரை விநாயகர் சிலைகளுக்கான வெளியூர் ஆர்டர்கள் வரவில்லை. கடந்தாண்டு நல்ல விற்பனையானதால் கணிசமாக லாபம் கிடைத்தது. இந்தாண்டு கொரோனா காரணமாக எதிர்பார்த்த வியாபாரம் நடக்குமா என்ற அச்சம் உள்ளது.

இருந்தாலும் அரசிடம் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வு வந்தால் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் மானாமதுரை, திருப்புவனம், வயல்சேரி உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.

Tags : Corona Ganesha ,Manamadurai Foreign ,Manamadurai Chunakam: Will Chaturthi , Corona, orders not coming, Ganesha statue making, Manamadurai, Chaturthi will happen?
× RELATED யானை தாக்கி விவசாயி பலி