கார்ட்டூன்கள் ஆபத்தானவையா?

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

நம்மில் பலருக்கு பால்ய காலம் என்றால் காமிக்ஸ் புத்தகங்களும், பாட்டு புத்தகங்களும், ஊர் சுற்றி விளையாடுவது என்று இருந்த காலமெல்லாம்  மலையேறி விட்டது. இப்போது இருக்கும் குழந்தைகளுக்கும், நகர வாழ்க்கைகளுக்கும் டி.விதான் பெரும் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. மெட்ரோ  சிட்டிகளில் குழந்தை வளர்ப்பு என்பதை வெறும் 500 சதுர அடிகளுக்குள் சாத்தியப்படுத்த வேண்டும். இங்குதான் டி.வி நிகழ்ச்சிகள் முக்கியத்துவம்  பெறுகின்றன. கார்ட்டூன்கள் வெறும் பொம்மை படங்கள் என்பதைத் தாண்டி நம் குழந்தைகளின் உளவியல்  பாதிப்பையும் சமூகம் பற்றிய போலியான  கற்பிதங்களையும் அவர்களுக்குள் விதைக்கின்றன.

கார்ட்டூன் தொடங்கியதன் காரணமே கதைகளின் வழி குழந்தைகளுக்கு சிறந்த வாழ்வியலை கற்றுத்தருவதுதான். நிதர்சன உலகில் இருக்கும்  வாழ்வினை பேசக்கூடியதாக இருக்க வேண்டும். அம்மா, அப்பா இவர்களைச் சார்ந்த சொந்தங்கள் என்கிற உலகத்தைத் தாண்டி இருக்கும்  மனிதர்களையும் அவர்களுக்கென்ற தனி கலாசாரம் என்று அனைத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும். தற்போது வருகிற கார்ட்டூன்கள் எல்லாம்  வெற்று சாகசங்களை மட்டுமே குழந்தைகளுக்கு கற்றுத் தருகின்றன. தலைக்கு மேல் கையை தூக்கி விரல் நீட்டி சக்திமான் என்று சொன்னால்  பறக்கலாம் என்றும் லட்டு தின்னால் சக்தி வரும் என்கிற அபத்தத்தையும் போதிக்கக் கூடாது.

இந்தியா  போன்ற பன்மைத்துவம் நிறைந்த  பல கலாசாரங்களை பின்பற்றும் மக்கள் உடைய நாட்டில் கிருஷ்ண பிரச்சாரங்களை மட்டுமே  கார்ட்டூன்கள் செய்து வருகின்றன. குழந்தைகள் மத்தியில் அவர்களை கவரும் வகையில் மதம் பிரச்சாரங்களும் ஒற்றை கடவுள் தான் உலகமென  அவர்களுக்கு கற்றுத் தருவது இனிவரும் எதிர்காலத்துக்கு ஒரு போதும் நல்லதல்ல. இந்தியாவில் தற்போது பிரபல மாகிக் கொண்டிருக்கும்  கார்ட்டூன்கள் மதச்சார்புடைய கதாபாத்திரங்கள் மட்டுமே. பல்வேறு மதங்களும் கலாச்சாரமும் நிறைந்த இந்தியாவில் ஒற்றை கலாசார பிரசாரம்  ஆபத்தானவை. குழந்தைகளுக்கு மதம், கலாச்சாரம் தாண்டி நட்பு வளர்க்க மனிதர்களை அறிமுகப்படுத்த வேண்டும்.  

மனிதர்களை விடுத்து இந்த உலகம் அனைத்து விலங்குகளுக்கும் உரியது. எந்தவொரு விலங்கின் மீதும் அருவெறுப்பையும் ஒவ்வாமையையும்  ஏற்படுத்தாத வகையில் அவற்றை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக வேற்றுமை களை குழந்தைகள் மனதில் வளர்க்கக்  கூடாது. ஒரு கார்ட்டூன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு சிறந்த உதாரணம் சோட்டா பீம். சோட்டா பீம் எனும் கார்ட்டூன் தான்  குழந்தைகளின் மத்தியில் எத்தனைவித வேறுபாடுகளை வளர்க்கிறது. குண்டான உருவத்தில் இருக்கும் ‘காளியா’ எப்போதும் அவசரக்குடுக்கையாகவும்  கேலிக்கு உரியவனாக மட்டுமே இருக்கிறான்.

அவனுக்கு உதவும் இரட்டையர்களான ‘டோலு போலு’ இருவரையும் ஆபத்தில் மாட்டிவிடக்கூடியவனாகவும் அல்லது அவர்கள் ஆபத்தில்  மாட்டிக்கொண்டால் அவர்களை கைவிட்டு போகக் கூடியவனாக மட்டுமே வருகிறான். சுட்கி எனும் பெண் லட்டு செய்து விற்கும் அம்மாவிற்கு  உதவக்கூடியவளாகவும் வழக்கம் போல் பெண் குழந்தைகள் என்றாலே பலவீனமானவர்கள் என்கிற கற்பிதத்துக்குத் தகுந்ததுபோல்  பலவீனமானவளாகவும் வருகிறாள். நல்லவர்கள் என்றால் சரியான உயரம், வெள்ளை நிறத்துடன் கூடுதலாக  சின்ன தொப்பையுடன் வருகிறார்கள்.  கெட்டவர்கள், அசுரர்கள் எல்லாம் கருப்பு நிறத்திலும் குண்டான உருவத்துடனும் திருடர்கள் கன்னத்தில் பெரிய மருவுடன் வருகிறார்கள்.

கருப்பு  நிறத்தில் எந்தவொரு  நல்ல கதாபாத்திரமும் இல்லை. இப்படி உருவத்தில் காட்டப்படும் வேற்றுமைகளைத் தாண்டி கொஞ்சம் சகிக்க  முடியாதது அதன் கதைகள்தான்.  கருப்பு நிறம் உடையவையெல்லாம் கெட்டவை என்றும் அதெல்லாம் வாழத்தகுதி இல்லை அவற்றை அழித்து  ஒழிக்க வேண்டுமென வன்முறை எண்ணத்தை குழந்தைகள் மத்தியில் உண்டாக்குகிறது. கெட்டவர்களும் அசுரர்களும் நேரடியாக மக்களை வந்து  தாக்குவதும் பீம் அவர்களை அடித்து விரட்டுவதும் அதுவும் லட்டு தின்றதும் கிடைக்கும் சக்தியினால் அவர்களை விரட்டுவது என சகிக்க முடியாத  கற்பனைகள் தான்.

இன்றைய யதார்த்த உலகில்  கெட்ட  விஷயங்கள்தான் இத்தகைய  லட்சணங்களுடன்  நல்லவை போல் தோற்றமெடுத்து வருகின்றன. நீங்கள்  நினைக்கலாம் குழந்தை பருவத்தில் இத்தகைய கதைகள் வரக்கூடாதா? குழந்தை பருவத்தில் இந்த அறியாமைதான் அழகு என அதில் உங்கள்  பகுத்தறிவு கேள்விகளை கேட்டு நிரப்பாதீர்கள் என நீங்கள் சொல்லலாம். நம் காலத்தில் நாம் ரசித்த புத்தகத்திற்கு இடையில் வைத்த மயிலிறகு  குட்டி போடும் என சொல்லி பார்த்து பார்த்தெல்லாம் வைத்திருக்கிறோம்.

நம் குழந்தை பருவ நம்பிக்கைகள் வழி மனிதர்களை நிர்ணயிக்கவும், அவர்கள் அப்படித்தான், இவர்கள் இப்படித்தான் என முன் கூட்டி தீர்மானிக்க  வைக்க வேண்டியதில்லை. இன்னும் சரியாக சொன்னால் குழந்தை வளர்ப்பில் எது நல்லது கெட்டது என அவர்களுக்கு சொல்ல தேவையில்லை.  எந்தவித கருத்தையும் வளர்க்கிறேன் என்கிற பெயரில் அவர்களிடம் திணிக்காமல் இருப்பதே சரியான குழந்தை வளர்ப்பு. ஆங்கிலத்தில் வரும் சில  குழந்தை பாடல்களுக்கான கார்ட்டூன்கள் மட்டுமே குழந்தைகளுக்கு காட்ட ஏற்றவை.

அந்தப் பாடல்களில் வெள்ளை, கருப்பு நிறம் கொண்ட குழந்தைகள் மட்டுமில்லாமல், சுருட்டை முடி, பொன்னிறமான முடி, முடி குறைந்த என்கிற  பலவித தோற்றங்கள் கொண்ட குழந்தைகள் வருகிறார்கள். யார் மீதும் மத அடிப்படையிலான சின்னங்கள் இருப்பதில்லை.  குழந்தைகளுக்கு   எந்தவொரு உருவம் குறித்த கேலியோ அவர்களை பற்றிய முன் தீர்மானங்களோ ஏதுமின்றி அனைவரிடமும் அன்பும் நட்பும் கொள்ள இந்தக்  கார்ட்டூன்கள் இருக்கின்றன. காட்டப்படும் விலங்குகள் கூட கண்ணைக் கவரும் விதமாகவும் அவற்றின் மீது அன்பு காட்டவும் உலகம் என்பது  மனிதர்கள், விலங்குகள் என அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்பதை உணர்த்தும் வகையில் வருகின்றன.

குழந்தைகளை கீரையை சாப்பிட வைக்க வைத்த ‘பாப்பாய்’ கேரக்டர்கள் போய் சோட்டா பீம்களும் கிருஷ்ண கதைகளும் வலம் வர வைக்கும் இந்த  மாதிரியான கார்ட்டூனீஸ்களிடமிருந்து கார்ட்டூனை, உலகை முதலில் காப்பாற்ற வேண்டும். பெற்றோர்கள் இந்த மாதிரியான கார்ட்டூன்களிடமிருந்து  காப்பாற்றினாலே நம் குழந்தைகளுக்கு நல்லதொரு குழந்தை பருவம் அமையும். யாரையும் உருவத்தை வைத்து தீர்மானிக்கக் கூடாது. அனைவரின்  மதமும் சமய நம்பிக்கையும் ஒன்றுபோல் இருக்க வேண்டியதில்லை எனப் புரிய வையுங்கள்.  காலத்துக்கும் அன்பும் நட்பும்தான் நம்மை இணைக்கும்  என்பதை உணர்த்துங்கள். அதுவே பெற்றோரின் சிறந்த வழிகாட்டுதல்.

சரோஜா

Related Stories: