×

கிணற்றில் பைக் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் பலி: ஒருவர் உயிர் தப்பினார்

பள்ளிப்பட்டு: பழடைந்த கிணற்றில் பைக் விழுந்ததில் 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். ஒரு மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த நாராயணபுரம் ஊராட்சி எக்னாபுரம் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகன் சந்தோஷ் (17), அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சத்யா (14), ஐயப்பன் மகன் விஜயகுமார் (17) ஆகிய 3 பேரும் அம்மையார்குப்பம் அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 9 மற்றும் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்கள் 3 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று கிராமத்தில் கூலி வேலைக்கு சென்றுவிட்டு, மதியம் 2 மணி அளவில் ஒரே பைக்கில் 3 பேரும் வீட்டுக்கு புறப்பட்டனர்.

கிராம சந்திப்பு சாலை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோரத்தில் புதர் மண்டி கிடந்த 80 அடி ஆழம் உள்ள பாழடைந்த கிணற்றில் கவிழ்ந்தது. இதில் சத்யா, சந்தோஷ் ஆகியோர் பைக்குடன் கிணற்றில் மூழ்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். விஜயகுமார் பைக்கில் இருந்து குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து மாணவர்களின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் கிராமப்புற சாலைகள் ஓரத்தில் பாழடைந்த கிணறுகள் மூடப்படாமலும், தடுப்புச்சுவர் இல்லாமலும் உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்கின்றனர். எனவே, இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : schoolchildren , In the well, the bike overturned, killing the school students
× RELATED பைக்கிலிருந்து கீழே விழுந்து வாலிபர் பலி