ஒன்றரை கோடி மதிப்பீட்டில் நல்லதண்ணீர் குளம் சீரமைப்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் 4வது வார்டு காந்தி ரோடு, 2வது வார்டு கலைஞர் நகர், 5வது வார்டு முருகப்ப நகர் ஆகிய பகுதிகளில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் இந்த குளத்தை குடிதண்ணீருக்காக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த குளத்தை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் வந்து விட்டன. குடியிருப்புவசிகள், குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் போடுவது இல்லை. அதற்கு பதிலாக, இந்த குளத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் நல்ல தண்ணீர் குளமாக இருந்த இக்குளம் அசுத்த தண்ணீர் குளமாக மாறிவிட்டது. மேலும், இந்த குளத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. இதனால், சமூக விரோதிகள் பலர் மறைவாக உள்ள இடத்தில், அமர்ந்து கொண்டு மது அருந்துவது சீட்டு ஆடுவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக இந்த குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி வந்தனர். இதனையடுத்து, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் சட்டப்பேரவையில், இந்த குளத்தை சீரமைத்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேசினார். அதன் காரணமாக, இந்த குளத்தை சீரமைப்பதற்காக, திருத்தணி நகர மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பாக ஒரு கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, இந்த பணிக்காக, அடிக்கல் நாட்டப்பட்டு குளம் மூழுவீச்சில் சீரமைக்கப்பட்டு வருகிறது.

இப்பணியின் முதற்கட்டமாக குளத்தை சுற்றிலும் கொட்டப்பட்டு உள்ள குப்பை மற்றும் கழிவுகள், மது பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்தும் தூர்வாரி அப்புறப்படுத்தப்பட்டது. குளக்கரையை சுற்றி கற்களால் சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த சுற்று சுவர் அருகில் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், குளக்கரையை சுற்றி மின் விளக்குகளும் பூங்கா மற்றும் நவீன கழிப்பிடங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் அந்த குளத்தில் தண்ணீரை நிரப்பு வதற்காக சட்டமன்ற உறுப்பினர் பி.எம். நரசிம்மன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், மின் மோட்டார் மூலம் ஆழ்துளை கிணற்றில் தண்ணீரை எடுத்து குளத்தில் சேமிக்கப்பட உள்ளது.

Related Stories: