×

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 லட்சம் நகைகள் போலீசில் ஒப்படைப்பு

தண்டையார்பேட்டை: சென்னை ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பியூஸ் (22). சவுகார்பேட்டை பகுதியில் நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை நகை பட்டறையில் 4 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசு, செயின், வெள்ளி மோதிரம் ஆகியவற்றை ஆர்டரின் பேரில் செய்தார். சுமார் 4 லட்சம் மதிப்புடைய இந்த நகைகளை ஒரு பையில் வைத்து, தனது வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார். வீட்டிற்கு சென்றதும், பைக்கில் வெள்ளி நகைகள் வைக்கப்பட்டு இருந்த பையை எடுக்க முயன்றபோது, அது மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே யானைக்கவுனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பியூஸுக்கு புதிய செல்போன் எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது.

அதில் பேசிய நபர், ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆதில் பாஷா (40) எனவும், எலக்ட்ரானிக் பொருட்கள் வியாபாரம் செய்வதாகவும் அறிமுகப்படுத்தி கொண்டார். மேலும், நீங்கள் தவறவிட்ட பையில் இருந்த செல்போன் எண் மூலம் தங்களை தொடர்பு கொண்டதாகவும், நகைகள் வைக்கப்பட்டு இருந்த அந்த பையை யானைக்கவுனி போலீசாரிடம் ஒப்படைப்பதாகவும் கூறி உள்ளார். உடனே யானைக்ககவுனி காவல் நிலையம் சென்ற பியூஸ், நடந்த சம்பவத்தை கூறினார். பின்னர், போலீசில் ஒப்படைக்கப்பட்ட 4 கிலோ வெள்ளி நகைகளை அடையாளம் காட்டினார். இதையடுத்து, நகைகளை எடுத்து செல்லும்போது, பாதுகாப்பாக கொண்டு செல்லுங்கள் என அறிவுறுத்தி, நகைகளை அவரிடம் ஒப்படைத்தனர் மேலும், நகைகள் வைக்கப்பட்டு இருந்த பையை போலீசில் நேர்மையாக ஒப்படைத்த ஆதில் பாஷாவை பாராட்டினர்.

Tags : road , Road, Rs 4 lakh, jewelery, handed over to police
× RELATED போலி நகைகள் மூலம் வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர், காதலி கைது