×

கொரோனா தொற்று குறைந்தவுடன் பஸ் போக்குவரத்து தொடங்கும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்று சமாளிக்க மார்ச் மாதம் முதல் மூன்று மாதம் வரை போக்குவரத்து தடை விதித்து மீண்டும் மண்டலத்துக்கு இடையே போக்குவரத்து துவங்கிய உடன் அதிக அளவில் பொதுமக்கள் பஸ்சில் பயணம் செய்தனர். இதில் பொதுமக்களின் கூட்டம் மாவட்டத்திற்கு இடையேயான போக்குவரத்தில் அதிகமிருந்தது. ஒரு சில இடங்களில் கூட்டம் குறைவாக ஏற வேண்டும் என டிரைவர் மற்றும் கண்டக்டர் கூறியும் பொதுமக்கள் அவர்களுடன் சண்டை போட்டனர். ஒரு சில இடங்களில் டிரைவர் மற்றும் கண்டக்டரை தாக்கும் சம்பவங்களும் நடந்தன.

இதையடுத்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மண்டலங்களுக்கிடையே நடத்தப்பட்ட போக்குவரத்து இயக்கத்தால் கொரோனா தொற்று அதிகமானதாக கருத்து தெரிவி்க்கப்பட்டன. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முதல்வர் மற்றும் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து, குழு அளிக்கும் அறிக்கையின்படி போக்குவரத்து தொடங்கப்படும். தற்போது போக்குவரத்து இல்லாத காரணத்தினால் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த போதுமான வசதி இல்லாதது தெரியவருகிறது. இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதியும் விவசாயிகளின் உற்பத்தி பொருள்கள் விலை ஏற்றத்தை தடுக்கவும் உற்பத்தி விலைக்கே விற்பனை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது உள்ள சூழலில் மண்டலம் மற்றும் மாவட்டத்திற்கு இடையேயான போக்குவரத்து தொடங்குவது இயலாத காரியம். மாவட்டத்திற்கு உள்ளேயும் ஓட்ட முடியாது; மண்டலங்களுக்குள்ளேயும் ஓட்ட முடியாது. உதாரணமாக கரூரிலிருந்து வேலூர் பாலம் சென்றவுடன் மாவட்ட எல்லை முடிவடையும். அங்கிருந்து பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டும். அங்கிருந்து மாற்று பேருந்து செயல்படும். இதிலும் ஒரு சில பிரச்சனைகள் உள்ளது. இதனால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது.

விவசாயிகள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் பிரச்சினை உள்ளது. அதனை இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி விவசாயிகள் தங்களின் பொருட்களை மினி ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய பழகிவிட்டனர். இவர்களுக்கான செலவு அதிகம்தான். எனினும் தற்போது உள்ள சூழலில் பொதுமக்கள் நலனே முக்கியமாக கருதுவதால் பஸ் போக்குவரத்து இயக்கப்படாது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இம்மாத இறுதிக்குள் கட்டுக்குள் வரும் என மருத்துவ குழு அறிக்கை அளித்துள்ளது.

எனவே கொரோனா தொற்றின் சதவீதம் இந்த மாதம் குறையும் என்றால் அடுத்த மாதம் முதல்வர் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து பஸ் போக்குவரத்து இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போது கொரோனா குறித்த விழிப்புணர்வு, நகரங்களை விட கிராமங்களில் அதிக அளவில் உள்ளது. அதனால், கொரோனா தொற்று சதவீதம் குறையும்பட்சத்தில் பஸ் போக்குவரத்து கண்டிப்பாக தொடங்கப்படும். மண்டலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து நடந்தபோது தொற்று சென்னையிலிருந்து அதிகமாக பரவியது என்பது தவறானது. பெங்களூரிலிருந்து அதிகம் பரவியதே காரணம். பிரதமர் கூறியதுபோல் நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க மாஸ்க்குடன் வாழப் பழகுவது சிறந்தது.

இதனை நமது கிராமப் புறங்களில் 99 சதவீதத்தினர் கடைபிடித்து வருகின்றனர். டெப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பஸ்களில் உள்ள பேட்டரி மற்றும் வாட்டர் லெவலை ஊழியர்கள் கண்காணித்து பராமரித்து வருகின்றனர். பஸ்களை தினமும் டெப்போக்களிலேயே இடம் மாற்றி நகர்த்தி வைக்கின்றனர். இதனால் பஸ்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. காய்கறி உள்ளிட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகளுக்கு பிரச்சினை உள்ளது. அதனை இந்த அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் நலன் கருதி விவசாயிகள் தங்களின் பொருட்களை மினி ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய பழகிவிட்டனர்.

* பேருந்துகள் இயங்காததால் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கையே முடங்கிவிட்டது: கே.என்.நேரு, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 5 மாதங்களும் ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக பெரிதும் பயன்படுத்தும் பேருந்து போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இடையில் சில நாட்கள் மட்டும் மண்டலம் விட்டு மண்டலம் என்றும், பின்னர் மாவட்டத்திற்குள் மட்டும் பேருந்து போக்குவரத்து என்று அறிவித்தனர். இப்போது, முழுவதுமாக தடை செய்து விட்டனர். தமிழக அரசின் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படுபவர்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். முக்கியமாக விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவர்கள், தங்களின் விவசாய நிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பூக்களை பேருந்து மூலம் நகர் பகுதிக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களிடம் இரண்டு சக்கர வாகனமோ, 4 சக்கர வாகனமோ இருக்காது்.  முழுக்க முழுக்க அரசு பேருந்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள். 5 மாதமாக பேருந்தை இயக்காமல் இருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் நஷ்டம் அடைந்துள்ளனர். கூலி தொழிலாளர்கள், தினசரி பேருந்து மூலமே மாவட்டத்திற்குள் வேலைக்கு சென்று வருவார்கள். இப்போது பேருந்து இயக்கப்படாததால் வேலை இழந்து தவிக்கிறார்கள். அதேபோன்று, கிராமப்புற மக்கள் அருகில் உள்ள சுகாதார மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால் கூட பேருந்து மூலம்தான் செல்வார்கள். தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை.

 கிராமப்புற மக்கள் ஒரு நல்லது, கெட்டதற்கு மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் வாங்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், இ-பாஸ் முறையிலும் அதிமுக அரசு ஊழல் செய்கிறது. ரூ.1000, ரூ.2,000 கொடுத்தால்தான் இ-பாஸ் கிடைக்கும் என்ற நிலை தமிழகம் முழுவதும் உள்ளது. இந்த அரசு, ஒரு திட்டத்தை அறிவித்தால் அதில் எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்றுதான் பார்க்கிறார்கள். மக்களுக்கு இந்த திட்டத்தால் எவ்வளவு பயன் கிடைக்கும் என்று பார்ப்பதில்லை.

 இனியும் தாமதிக்காமல் அரசு பேருந்துகளை உடனடியாக இயக்க வேண்டும். அரசு பேருந்துகளை இப்படி பல மாதம் ஓடாமல் நிறுத்தி வைத்தால் ஆயில் லீக் ஆகும். பேட்டரி செயல்படாமல் போகும். டயரில் காற்று இறங்கினால், அந்த டயரை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். 5 மாதங்களுக்கு பிறகு பேருந்தை இயக்கினால், ஒரு பஸ்சுக்கு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் செலவு செய்ய வேண்டியது வரும். இப்போது கூட பேருந்தை இயக்காமல் வைத்திருப்பது கொரோனாவுக்காக அல்ல. இப்போது பேருந்து இயக்கினால், 60 பயணிகள் ஏறும் பஸ்சில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பயணிகளே ஏற்ற முடியும். அப்படி இயக்கினால், அரசுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படும்.

அதனால், பேருந்துகளை இயக்காமல் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தாலே போதும், பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதால்தான் அதிமுக அரசு பேருந்தை இயக்காமல் வைத்துள்ளது. மக்களின் வசதியை கருத்தில் கொண்டு, லாப நஷ்ட கணக்கை பார்க்காமல் உடனடியாக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். அப்படி பேருந்து இயக்கும்போது, சமூகஇடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முதல்வர் மட்டும் கொரோனா ஆய்வு என்று பல மாவட்டங்களுக்கு செல்கிறார். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், அதிகாரிகள் என 2 ஆயிரம் பேர் சமூக இடைவெளி இல்லாமல் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் எப்படி இ-பாஸ் கிடைக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அதே நேரம் சாதாரண மக்கள் சரியான காரணத்துக்காக இ-பாஸ் விண்ணப்பம் செய்தால் நிராகரிக்கப்படுகிறது. அதனால், இ-பாஸ் வழங்குவதில் வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பேருந்தை இயக்காமல் வைத்திருப்பது கொரோனாவுக்காக அல்ல. இப்போது பேருந்தை இயக்கினால், 60 பயணிகள் ஏறும் பஸ்சில் 20 பயணிகளையே ஏற்ற முடியும். அதனால் அரசுக்கு பல லட்சம் நஷ்டம் வரும். இதனால்தான் அதிமுக அரசு பேருந்தை இயக்காமல் இருக்கிறது.

Tags : Vijayabaskar , Corona, soon after, Bus Transport, MR Vijayabaskar, Minister of Transport
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு