×

பாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்: ஆறுமுக நயினார், சிஐடியு பொதுச்செயலாளர்

தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தது. ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது 60 சதவீத பயணிகளை தான் ஏற்ற வேண்டும் என தெரிவித்தனர். வழக்கமாக தமிழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் 2 கோடி பேர் வரை நாள்தோறும் பயணிக்கின்றனர். இதில், 1.60 கோடி பேர் மாநகர பஸ்களில் தான் பயணித்தனர். தமிழகத்தில் மாநகரில் தான் அதிக பஸ்கள் இயக்கப்படுகிறது. அப்போது கூட்டம் அதிகமாக இருக்கும். அரசு 60 சதவீத பயணிகளை மட்டும் ஏற்ற வேண்டும் என்றால், ஒரு டவுன் பஸ் விடும் இடத்தில் இரண்டு பஸ்களை இயக்கியிருக்க வேண்டும். அப்போது தான் கூட்டம் குறைவாக இருந்திருக்கும்.

ஆனால் 60 சதவீதம் பயணிகளை ஏற்ற வேண்டும் என கூறிவிட்டு, ஏற்கனவே 100 சதவீதம் இயங்கிக்கொண்டிருந்த பஸ்களில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. மேலும் சில இடங்களில் 30 சதவீதம், 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.  அப்போது கூட்டம் அதிகரித்ததது. பிறகு பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டது. அரசு கூறியதை அதிகாரிகள் கேட்கவில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். குறிப்பாக கூலி தொழிலாளிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுமானத்தொழில் உள்ளிட்ட எந்த வேலைக்கும் மக்களால் செல்ல இயலவில்லை. எனவே பொதுபோக்குவரத்து தேவை. பாதுகாப்பு வசதிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும். இல்லை என்றால் பஸ்களை இயக்கும் தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக குறைந்த பயணிகளுடன் பேருந்துகளை இயக்க வேண்டும்.தமிழகத்தைவிட தொற்று அதிகமாகவுள்ள மகராஷ்டிராவில் பஸ்கள் இயங்குகின்றன. மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, டெல்லியில் பஸ்கள் ஓடுகிறது. இந்த மாநிலங்களில் பொதுபோக்குவரத்தை இயக்கிக்கொண்டே, தொற்றையும் குறைந்து வருகிறார்கள்.

எனவே பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு பஸ்களை இயக்க வேண்டும். பெரும்பாலான கூலி தொழிலாளிகள் கிராமப்பகுதிகளிலிருந்து தான் நகரங்களுக்கு வேலைக்கு வருகிறார்கள். எனவே நகர்ப்புறங்களை மையமாகக்கொண்டு செய்யப்படும் அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களின் வசதிக்காக ஏராளமான பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு இந்த வசதியை அரசு செய்து கொடுத்துள்ளது. பெரிய நிறுவனங்கள் சொந்த வாகனங்களில் தொழிலாளர்களை பணிக்கு அழைத்து செல்கின்றனர்.

ஆனால் பொதுபோக்குவரத்து இல்லாததால், சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவோரும், கூலி தொழிலாளர்களும் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, கால்டாக்சி இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஆட்டோ, கால்டாக்சி பொதுபோக்குவரத்து சார்ந்து தான் இருக்கிறது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், எழும்பூர் ரயில்நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினசரி 10 லட்சம் பேர் வருவார்கள். இதேபோல் இவ்விடங்களிலிருந்து தினசரி 10 லட்சம் பேர் பல்வேறு பகுதிகளுக்கு செல்வார்கள். இவர்களுக்காக 2 முதல் 3 லட்சம் பேர் வேலை செய்வார்கள். அதாவது, டீக்கடை, ஹோட்டல் போன்றவற்றை நடத்தி வாழ்த்து வந்தனர். இப்போது அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே பொதுபோக்குவரத்தை இயக்காததால் அதில் பயணம் செய்பவர்கள் மட்டும் இல்லாம் தொழில், வர்த்தகம் என பல்வேறு பிரிவுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுபோக்குவரத்து இல்லாமல் இயல்பு நிலை திரும்பாது. டாக்டர்களே பொதுமுடக்கம் தீர்வு இல்லை என்று கூறியுள்ளனர். மக்களிடம் விழிப்புணர்வு உள்ளது. மாஸ்க் அணிந்து தான் பயணிக்கிறார்கள். எனவே பொதுபோக்குவரத்தை துவங்க வேண்டும். தொடர்ந்து பஸ் போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதால் தனியார் மயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பஸ்களை இயக்காததால் ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பொதுபோக்குவரத்து இல்லாததால், சிறிய நிறுவனங்களில் பணியாற்றுவோரும், கூலி தொழிலாளர்களும் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ, கால் டாக்சி இயங்கலாம் என அரசு  அறிவித்துள்ளது. ஆனால் ஆட்டோ, கால் டாக்சி பொதுபோக்குவரத்தை சார்ந்து தான் இருக்கிறது.

* மக்கள், அரசு ஊழியர்களின் நலன் காக்க பேருந்துகளை இயக்குவது மிக முக்கியம்:  எஸ்.தமிழ்செல்வி, தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்க மாநில ஒருங்கிணைப்பாளர்
பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட்டால் அதன் மூலம் கொரோனா வைரஸ் வேகமாக பரவும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. கடந்த மார்ச் மாதம் முதல் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதித்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆரம்பத்தில் கடும் கட்டுப்பாடுடன் அமல்படுத்தினாலும், தற்போது தளர்வுகள் அறிவித்துள்ளனர். அரசு ஊழியர்களை பொறுத்தவரை முதல் ஊரடங்கின்போது தேவையான அளவுக்கு மட்டும் ஊழியர்கள் அலுவலகம் வந்தால் போதும் என்றனர். அதன்படி ஊழியர்களும் பணிக்கு வந்தனர்.

ஆனால், முதல் ஊரடங்கு முடிந்த பிறகு, 50 சதவீத ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொது போக்குவரத்து இயக்கப்படவில்லை. இதனால், பணிக்கு வர விருப்பம் உள்ள பணியாளர்கள் கூட பணிக்கு வர முடியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பெண் ஊழியர்கள், பணிபுரியும் அலுவலகத்திற்கு பல கி.மீ. வர வேண்டும் என்பதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். தர்மபுரியில் 2 செவிலியர்கள் நீண்ட தூரம் இருசக்கர வாகனம் ஓட்டி வந்ததாலும், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தாலும், சரிவர ஓட்ட தெரியாமல் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

பேருந்துகள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பலர் முன் அனுபவமின்றி வாகனங்களை ஓட்டி உயிரிழக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து இயக்க தாமதமானால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மாதம் ரூ.5 ஆயிரம் வரை பெட்ரோல், டீசல் போன்றவைக்கு செலவு செய்ய வேண்டி உள்ளது. உயர் அதிகாரிகள் எப்போதும் போல் வாகனங்களில்தான் அலுவலகத்திற்கு வருவார்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. தினமும் பேருந்துகளில் வந்து செல்லும் குறைவாக சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரத்திற்கும் மேல் கூடுதல் செலவு ஆகிறது. மேலும் நீண்ட தூர பயணங்கள் செய்வதாலும் உடல்வலி, சோர்வு போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களும் பொது போக்குவரத்து இயக்கப்படாமல் இருப்பதால், கிராமப்புற மக்களும் மருத்துவ சிகிச்சைகளுக்கும், முக்கிய அவசர வேலைகளுக்கும் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதேபோல், பொது போக்குவரத்து முடக்கத்தால் லாரிகள், வாடகை வாகனங்கள், அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், மளிகை பொருட்கள்,  மருத்துவ பொருட்கள் ஏற்றுமதிகளுக்கு அதிக வாடகை வசூலிக்கின்றனர். இதனால் கடைகளில் விற்பனைக்கு வரும் பொருட்களில் இந்த வாடகையை சேர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறியுள்ளனர். போக்குவரத்து தொடங்காமல் எப்படி பள்ளிகளை திறக்க முடியும். கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள் என்று அரசு சொல்லிவிட்ட நிலையில், பொது போக்குவரத்தை உடனடியாக இயக்க வேண்டும்.

இவ்வளவு காலமாக பேருந்து இயக்கப்படாமல் இருப்பதால் அதன் உதிரி பாகங்கள் பழுதாகியிருக்க கூடும். அதை சரி செய்ய ஒவ்வொரு பேருந்துகளுக்கும் பல லட்சம் செலவு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே இதனை காரணம் காட்டி, இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று கூறி மற்ற துறைகள் போல், பேருந்து போக்குவரத்து துறையையும் தனியாருக்கு விட்டாலும் சொல்வதற்கில்லை என யோசிக்க வேண்டி உள்ளது. மக்களின் நலன் கருதி அரசு உடனடியாக பேருந்தை இயக்க வேண்டும்.

கொரோனா காலத்தில் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் என்றார்கள். ஆனால் இதுவரை எதுவுமே அளிக்கவில்லை. அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டியை குறைப்பது, பஞ்சப்படி முடக்கம், சரண்டர் விடுப்புகளை முடக்கி வைப்பதுதான் நடக்கிறது. இதையெல்லாம் நீக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். பேருந்து இயக்கப்படாமல் இருப்பதால் எப்படியாவது வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் பலர் இரு சக்கர வாகனங்களை முன் அனுபவமின்றி ஓட்டி உயிரிழக்கக் கூடிய நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

Tags : Arumuga Nair ,security facilities ,CITU , Security Facility, Bus, Operation, Arumuga Nair, CITU General Secretary
× RELATED 5 மாதங்களுக்கு பின் திருச்சியில் தனியார் பஸ்கள் இயங்கின