×

சீன சப்ளை ‘கட்’; ஸ்மார்ட் போன் விற்பனை ‘அவுட்’

புதுடெல்லி: சீனாவில் இருந்து சப்ளை இல்லாததால், இந்தியாவில் ஸ்மார்ட் விற்பனை கடந்த ஏப்ரல் ஜூன் காலாண்டில் பாதியாக குறைந்து விட்டது. கொரோனா பரவல் சீனாவில் துவங்கியபோதே இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களின் உற்பத்தி பாதிக்கத் தொடங்கியது. ஸ்மார்ட் போன் உதிரி பாகம் உட்பட, எலக்ட்ரானிக் மூலப்பொருட்களுக்கு சீனாவையே பெரிதும் நம்பியிருந்ததுதான் இதற்கு காரணம். இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட்ட ஸ்மார்ட் போன் புள்ளி விவரங்களின் அடிப்படையில் விற்பனை விவரங்களை ஐடிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் 1.8 கோடி போன்கள் விற்பனையாகியுள்ளன. ஆனால், முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 3.8 கோடி போன்கள் விற்று தீர்ந்துள்ளன.

கடந்த ஜனவரி மார்ச் காலாண்டின் இறுதியிலேயே ஊரடங்கு அமலுக்கு வந்து விட்டது. அப்போது முதலே இந்தியாவுக்கு ஸ்மார்ட் போன் சப்ளை பாதிக்கப்பட்டது. அடுத்த காலாண்டில் சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பாதி ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருந்தபோதும், போன் சப்ளை மற்றும் விற்பனை குறைந்து விட்டது. சீன நிறுவனங்களின் போன்கள் சில இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இதுபோல் பிற போன் உற்பத்திக்கும் சீன உதிரி பாகங்களை நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால், சீனாவில் இருந்து சப்ளை நின்று விட்டது. முன்னதாக அங்கிருந்து அனுப்பப்பட்ட உதிரிபாகங்கள், துறைமுகங்களில் தேங்கியுள்ளன. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் விற்பனை 51 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் விற்பனை அதிகரித்தது. ஆனாலும், வாடிக்கையாளர்கள் விரும்பிய போன்களை வாங்க முடியவில்லை. கிடைத்ததைத்தான் வாங்க வேண்டி வந்தது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags : Chinese , Chinese supply, ‘cut’; Smart phone, sales, ‘out’
× RELATED பம்ப் ஆபரேட்டருக்கு சரமாரி வெட்டு மர்மநபர்களுக்கு வலை