கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா: சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு கடும் கண்டனம்

சென்னை: கட்டாயப்படுத்தி பணியில் ஈடுபடுத்தப்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டதற்கு சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு கடும் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பணியில் கட்டாயப்படுத்தி சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள்  ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் பலருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. ஆனால், ராணிப்பேட்டை கலெக்டர் உத்தரவுப்படி கட்டுப்பாட்டு அலுவலர்கள் சத்துணவு பணியாளர்களையும், அங்கன்வாடி பணியாளர்களையும் அச்சுறுத்தி கல்லூரிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று உறுதியானவர்களுக்கு சமையல் செய்யவும், பரிமாறுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பணியாற்றிய அதே இடத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. அவர்கள் நெமிலி ஒன்றியத்தில் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் ஆவர். இது மற்ற ஊழியர்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு பரிசீலித்து அப்பாவி பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: