ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி தொற்று சென்னையில் கொரோனா பாதிப்பு 7% சதவீதமாக குறைந்தது

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு 7 சதவீதமாக குறைந்துள்ளது. தினசரி பதிவாகும் தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடந்த வாரம் சென்னையில் தினசரி ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. தற்போது தினசரி ஆயிரத்திற்கு குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகிறது. சென்னையில் ஜூன் 8ம் தேதி வரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 94 பேர் குணமடைந்துவிட்டனர். 2290 பேர் மரணம் அடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி திருவொற்றியூரில் 380 பேர், மணலியில் 85 பேர், மாதவரத்தில் 447 பேர், தண்டையார்பேட்டையில் 619 பேர், ராயபுரத்தில் 809 பேர், திருவிக நகரில் 765 பேர், அம்பத்தூரில் 1510 பேர், அண்ணா நகரில் 1281 பேர், தேனாம்பேட்டையில் 827 பேர், கோடம்பாக்கத்தில் 1354 பேர், வளசரவாக்கத்தில் 824 பேர், ஆலந்தூரில் 521 பேர், அடையாறில் 980 பேர், பெருங்குடியில் 545 பேர், சோழிங்கநல்லூரில் 467 பேர், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 320 சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. கடந்த 8 மற்றும் 7ம் தேதி சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் சென்னையில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஜூலை மாதத்தில் சோதனைகளை அதிகரிக்க தொடங்கியதால் தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியது. இதன்படி ஜூலை மாதம் தொடக்கத்தில் தினசரி பாதிப்பு சதவீதம் 20.5 சதவீதமாக இருந்தது. ஜூலை இறுதியில் இந்த பாதிப்பு 9 சதவீதமாக குறைந்து. இதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் இந்த பாதிப்பு தொடர்ந்து குறையத் தொடங்கியது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி சென்னையில் 984 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் 12 ஆயிரத்து 206 சோதனைகள் செய்யப்பட்டு இருந்தது. இதன்படி 8.1 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 8ம் தேதி சென்னையில் 986 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருந்தது. அன்றைய தினம் 14 ஆயிரத்து 27 பேருக்கு சோதனை செய்யப்பட்டு இருந்தது. இதன்படி சதவீதம் 7 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: