ராகுல் காந்தி ஏற்க விரும்பாத பட்சத்தில் காங்கிரசுக்கு புதிய தலைவரை உடனே தேர்ந்தெடுக்க வேண்டும்: மூத்த தலைவர் சசிதரூர் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரும்பவில்லை என்றால், புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சசிதரூர் கூறியுள்ளார். கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று, ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை கடந்தாண்டு ஜூலை 3ம் தேதி ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி கடந்தாண்டு ஆகஸ்ட் 10ல் பொறுப்பேற்றார். அவர் இப்பொறுப்பை ஏற்று, இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் நேற்று அளித்த பேட்டி:

இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. அவர் தலைவராக இருக்கிறார் என்பதற்காக கட்சியின் தலைமை பொறுப்பு என்ற பாரத்தை காலம் முழுவதும் அவர் சுமப்பார் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. எனவே, ராகுல் காந்தி மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும். அவர் விரும்பாத பட்சத்தில், புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கையை கட்சி உடனடியாக தொடங்க வேண்டும். ஏனெனில், காங்கிரசை தலைவர் இல்லாத கட்சி, மாலுமி இல்லாத கப்பல் என்ற  ரீதியில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. ஊடகங்களும் மக்கள் மத்தியில் இந்த எண்ணத்தை உருவாக்கி விடுகின்றன. கட்சி தலைவராக ஒருவரை தேர்ந்தெடுத்தால், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: