×

கேரள தங்க கடத்தல் விசாரணை என்ஐஏ துபாய் செல்ல மத்திய அரசு அனுமதி

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் 3வது முக்கிய நபரான பைசல் பரீதிடம் விசாரணை நடத்த துபாய் செல்ல என்ஐஏவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்திய வழக்கில் சொப்னா, சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 3வது முக்கிய நபராக திருச்சூர் கொடுங்கல்லூரை சேர்ந்த பைசல் பரீத் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தற்போது துபாயில் உள்ளார். பைசல் பரீத்தான் துபாயில் தங்கத்தை வாங்கி தூதரக பார்சலில் அனுப்பி வந்துள்ளார் என்பது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய இன்டர்போல் உதவியை என்ஐஏ கோரியது. மேலும், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடமும் கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, துபாய் போலீசார் பைசல் பரீதை கைது செய்து காவலில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க பாஸ்போர்ட்டையும் மத்திய அரசு முடக்கியது. அவரை கைது செய்து விசாரிக்கவும், தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறப்படும் தற்போது துபாயில் உள்ள, அமீரக தூதரக அட்டாஷே ராஷித் காமிஸ் அல்சலாமியிடம் விசாரணை நடத்தவும் என்ஐஏ மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை ஐக்கிய அரபு  அமீரகத்துக்கு தகவல் தெரிவித்தது. இந்த நிலையில், என்ஐஏ அதிகாரிகள் துபாய் சென்று விசாரணை நடத்த, அமீரகம் அனுமதி அளித்துள்ளது. அவர்கள் விரைவில் துபாய் செல்வார்கள் என தெரிகிறது.

Tags : Kerala ,NIA ,Dubai Kerala ,Dubai , Kerala gold smuggling, investigation, NIA, go to Dubai, Central Government, permission
× RELATED ஸவப்னா தங்கக் கடத்தல் வழக்கில் என்.ஐ.ஏ....