அதிக பலத்துடன் ராஜபக்சே தமிழர்களின் உரிமையை காக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிக பலத்துடன் ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளதையடுத்து தமிழர்களின் எஞ்சிய உரிமையை இந்தியா காக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் அண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுமக்கள் முன்னணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமை, பாதுகாப்பு குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.

இலங்கையின் 13வது அரசியல் சட்டத் திருத்தம் இந்திய வலியுறுத்தலின் அடிப்படையில் செய்யப்பட்ட திருத்தம் ஆகும். அதனடிப்படையில் தான் இலங்கையில் மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த அரசுகளின் மூலம் தான் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு, சில  அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்பட்டால், வட கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் தெருவிளக்கு போடுவதற்கும், குடிநீர் குழாய் அமைப்பதற்கும் கூட ராஜபக்சேக்களைத் தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும். தமிழர்களுக்கு கிடைத்திருந்த குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் கூட பறிக்கப்பட்டு விடும்.  அதுமட்டுமின்றி, 13வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்வது இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். அதை இந்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களின் அரைகுறை உரிமைகளையும், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது இந்திய அரசின் கடமை ஆகும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை விரைவுபடுத்தி குற்றம் இழைத்தவர்கள் அனைவருக்கும், அவர்கள் எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும், தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: