×

2வது முறை திருமணத்துக்கு முயற்சி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி: காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்

வேலூர்: வேலூரில் 2வது முறையாக திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயற்சி செய்ததால், வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை சமூக நலத்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம், இறப்பு நிகழ்ச்சிகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகளவில் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதில் புகார் வந்த குழந்தை திருமணங்கள் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் மட்டும் 140க்கும் மேற்பட்ட குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், வேலூர் சேண்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு 15 வயது சிறுமிக்கும், 27 வயது வாலிபருக்கும் கடந்த மாதம் 13ம் தேதி திருமணம் நடைபெற இருந்துள்ளது. தகவலறிந்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி உத்தரவின்பேரில், ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் சென்று சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் இனி 18 வயதுக்கு முன்பு திருமணம் செய்யமாட்டோம் என எழுத்து பூர்வமாக எழுதிக்கொடுத்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், சிறுமிக்கு மீண்டும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நேற்று முன்தினம் திடீரென வீட்டைவிட்டு வெளியேறி வேலூர் புதிய பஸ் நிலையம் வந்தார். அங்கிருந்து, சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்களுக்கு தகவலை தெரிவித்து கதறி அழுதார். அப்போது, ‘நான் 18 வயது முடியும் வரை காப்பகத்தில் இருந்து கொள்கிறேன்’ என சிறுமி கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சமூக நலத்துறை அதிகாரிகள் சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், சிறுமியின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : home , For the 2nd time, the girl, who left home to try for marriage, was placed in custody
× RELATED தூத்துக்குடியில் இருந்து கட்டாய...