மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியானது: நீர் மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு விநாடிக்கு 1.45 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலையில் 1.50 லட்சம் கன அடியாக உயர்ந்தது. இதனால், ஒகேனக்கல்லில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காணப்படுகிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 8 மணியளவில் 1.30 லட்சம் கனஅடியானது. நீர்வரத்து அதிகரிப்பால் நேற்று முன்தினம் 70.05 அடியாக இருந்த மேட்டூர் நீர்மட்டம், நேற்று இரவு  81.10 அடியானது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 11 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 43.06 டி.எம்.சி. நீர்வரத்து அதிகரிப்பால், விரைவில் மேட்டூர் அணை 100 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவிரி கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். காவிரியில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, காடு மலைகளில் இருந்து ஏராளமாக மரங்களும், பெரிய கட்டைகளும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டன. பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி, பாலாறு பகுதிகளில் கிராம மக்கள் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரங்களை விறகிற்காக சேகரித்து சென்றனர். காவிரி கரையில் விவசாயிகள் பயிரிட்டிருந்த கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட பயிர்கள் பலன்தரும் நிலையில், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நீரில் மூழ்கி வீணாகும் என்பதால் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர். நீர்திறப்பு குைறப்பு: மழை குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு நேற்று பிற்பகலில் 85,600 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: