×

கேரளாவில் நிலச்சரிவில் பலியான தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வர் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: “கேரளாவில் நிலச்சரிவில் பலியான தமிழக தொழிலாளர்களின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி வழங்க வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலம் மூணாறு அருகில் உள்ள ராஜமாலா பகுதி தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தமிழக தொழிலாளர்கள் 80 பேருக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி-29 பேர் இதுவரை மரணமடைந்துள்ளார்கள் என்றும், மீதிப்பேரை மீட்கும் பணி தொடருகிறது என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தில் உள்ள கோவில்பட்டி கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால்-தங்கள் உறவினர்களைப் பறிகொடுத்து அங்கும் செல்ல முடியாமல் உறவினர்கள் அனைவரும் கண் கலங்கி-தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே நிலச்சரிவு நிகழ்ந்த இடத்திற்குச் செல்வதற்கு உரிய இ-பாஸ், வாகன வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திட கேரள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிடுமாறும், தமிழக அரசின் சார்பிலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி அளித்திட வேண்டும் முதல்வர் பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தற்போது அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து-உயிரிழந்தோர் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் - மண்ணில் புதைந்து கிடக்கும் அனைவரையும் விரைந்து மீட்டிட மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Chief Minister ,families ,Kerala ,Edappadi ,MK Stalin ,landslide ,Tamil Nadu , Kerala, landslide victims, Tamil Nadu workers, family, financial assistance, Chief Minister Edappadi, MK Stalin's request
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...