தாழம்பூர் காவல் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்கள்: பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு

திருப்போரூர்: தாழம்பூர் காவல் நிலையம் அருகே சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் பறிமுதல்  வாகனங்களால் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அருகே உள்ள புறநகர் பகுதியான தாழம்பூர் காவல் நிலையம் ஓ.எம்.ஆர். சாலையையொட்டி நாவலூரில் அமைந்துள்ளது. நாவலூர், தாழம்பூர், பொன்மார், மாம்பாக்கம், மேலக்கோட்டையூர், கீழக்கோட்டையூர், வேங்கடமங்கலம், ரத்தின மங்கலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் இந்த காவல் நிலைய எல்லையில் வருகின்றன.

இந்த கிராமங்களில் உள்ள ஏரிகளில் இருந்து சட்ட விரோதமான மண் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறு விதிகளை மீறி மண் எடுத்துச் செல்லுதல், ஜல்லிக்கற்களை ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றில் ஈடுபடும் வாகனங்கள் வருவாய்த் துறையினராலும், காவல் துறையினராலும் பிடிக்கப்பட்டு தாழம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுகிறது. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் இடம் இல்லாததால் காவல் நிலையம் அமைந்துள்ள ஓ.எம்.ஆர். சாலையினை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அதன் உரிமையாளர்களால் வழக்குகளை முடித்து எடுத்துச் செல்லப்படாததால் அங்கேயே துருப்பிடித்து வீணாகின்றன. மேலும், வாகனங்களில் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட மண் கொட்டப்படாததால் அவற்றில் செடிகள் முளைத்து காணப்படுகின்றன. ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஓட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த சர்வீஸ் சாலையை பயன்படுத்தித்தான் வர வேண்டும். இந்த சர்வீஸ் சாலையின் ஒரு புறம் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் எதிரெதிரே செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகவே, தாழம்பூர் காவல் நிலைய நிர்வாகம் பொதுமக்களுக்கு இடையூறாக சர்வீஸ் சாலையில் நிறுத்தி உள்ள இந்த பறிமுதல் வாகனங்களை பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வேறு இடங்களில் நிறுத்தி பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: