ஊரப்பாக்கத்தில் விதி மீறிய இறைச்சி கடைக்கு சீல்: தாசில்தார் அதிரடி

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கத்தில் முழு ஊரடங்கு மீறி திறந்து இருந்த இறைச்சி கடைக்கு வண்டலூர் தாசில்தார் அதிரடியாக சீல் வைத்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் தாலுகா ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி மெயின் ரோட்டில் தாமஸ் (46) என்பவர் இறைச்சி கடை திறந்து வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் வண்டலூர் தாசில்தாருக்கும், கூடுவாஞ்சேரி போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த, வண்டலூர் தாசில்தார் செந்தில், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது, தாமஸ் இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்வதை கண்டு பிடித்தனர். பின்னர், கடையில் இருந்த 125 கோழிகளையும், ஒரு ஆட்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, வண்டலூர் தாசில்தார் அந்த இறைச்சிக்கு கடைக்கு சீல் வைத்தார். மேலும் இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: