இலங்கையிலிருந்து கோவைக்கு விமானத்தில் ‘தாதா’ அங்கோட லொக்காவை சந்திக்க வந்தவர்கள் யார்? போலீசார் விசாரணை

கோவை: தாதா அங்கோட லொக்கா இறந்த விவகாரத்தில் இலங்கையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இலங்கையின் போதை பொருள் கடத்தல், கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த அங்கோட லொக்கா (35) இறந்தார். இவர் மாரடைப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக உடன் இருந்த அவர் காதலி அமானி தாஞ்சி (27) தெரிவித்தார். சடலம் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். 7 தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு ஆதாரங்கள் சேகரிக்கும் பணி நடக்கிறது. இந்த வழக்கில் கைதான அமானி தாஞ்சி சென்னை புழல் சிறையில் சிறப்பு பிரிவில் அடைக்கப்பட்டார். கோவையில் கைதான வழக்கறிஞர் சிவகாம சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோரையும் கஸ்டடி எடுக்கவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் கஸ்டடி அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கோட லொக்காவின் செல்போனில் தொடர்பில் இருந்த நபர்களை போலீசார் விசாரணைக்கு அழைக்க திட்டமிட்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கோட லொக்கா சேரன் மாநகர் வந்துள்ளதாக தெரிகிறது. அக்டோபரில் இருந்து அவர் இறக்கும் வரை அவருடன் நெருங்கி நட்பில் இருந்தவர்கள், அவருக்கு உதவி செய்தவர்கள், குறிப்பாக இலங்கையில் அவருக்காக பல்வேறு கடத்தல் மற்றும் குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் லொக்காவின் தொடர்புகள் மதுரை, சிவகங்கை, திருச்சி, சென்னை வட்டாரங்களில் இருப்பதாக தெரிகிறது. துபாயில் இவர் சிலரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கோவையில் ஊரடங்கு கட்டுபாட்டினால் வெளியூர் செல்ல முடியாமல் அங்கோட லொக்கா முடங்கியிருந்ததாக தெரிகிறது. அவரின் வங்கி கணக்கு, அவர் பதுக்கி வைத்த வெளிநாட்டு பணம் தொடர்பான முக்கிய தகவல்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. போலீசார் கூறுகையில், ‘‘அங்கோட லொக்கா விஷம் வைத்து கொலை செய்யப்பட்டரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் உடற்கூறு முடிவுகள் மூலமாகவே இதை நிரூபிக்கவேண்டியுள்ளது. கோவை வட்டார அளவில் விசாரித்து வருகிறோம். இலங்கையில் அவரின் செயல்பாடு, குற்ற வழக்குகளை எங்களால் விசாரிக்க முடியாது. 3 பேரிடம் கஸ்டடி விசாரணை, பிரேத பரிசோதனை முடிவுகள் வைத்து இந்த வழக்கின் திசை மாறும் நிலையிருக்கிறது. இலங்கையில் இருந்து கோவை வந்து சென்றவர்கள். லொக்காவின் தொடர்பில் உள்ள சிலரை சந்தேகிக்கிறோம். நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்படும்’’ என்றனர்.

Related Stories: