×

மழை வேண்டி வயல்வெளியில் பொங்கலிட்டு வழிபாடு: பசுக்களுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை

அலங்காநல்லூர்: மழை வேண்டி அலங்காநல்லூர் அருகே வயல்வெளியில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கள்ளந்திரி பாசன பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் முதல்போக நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. மழை பொழிவு குறைவால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்ட போது கிடை மாடுகள் வளர்ப்பவர்கள் மழை வேண்டி அழகர்கோயிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்த ஆண்டு கொரோனா தோற்று காரணமாக கோயில்களில் வழிபாடு மற்றும் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொன்றுதொட்டு வரும் வழிபாடு முறைகள் தடைபடாதவாறு கால்நடைகளுக்கு உணவு, தண்ணீர் கிடைக்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் குலமங்கலம் கிராமத்தில் வயல்வெளியில் பொங்கல் வைத்து கிடை மாடுகளுக்கு படைத்தனர். பசுக்களுக்கு வேட்டி-துண்டு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபட்டனர். கிடைமாடு வளர்த்து வரும் மைக்குடி மலைச்சாமி மற்றும் குலமங்கலம் இயற்கை விவசாயி திருப்பதி ஆகியோர் கூறுகையில், ‘கிடைமாடு வளர்ப்பதை 5 தலைமுறையாக செய்து வருகிறோம். ஆண்டுதோறும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அதன் சுற்று வட்டார கிராமங்களில் குலமங்கலம், பூதகுடி, பண்ணைகுடி, அச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் இயற்கை உரத்திற்காக விளைநிலங்களில் கிடை அமர்த்துவது வழக்கம்.

இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்ய வில்லை.  கண்மாய், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு உணவு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த கடும் வறட்சி நீங்கி மதுரை மாவட்ட பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும், தண்ணீர், உணவு பற்றாக்குறை நீங்க வேண்டியும் பாரம்பரிய முறைப்படி வயல்வெளியில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தோம்’ என்றனர்.

Tags : field , Rain, field, Pongalittu worship
× RELATED சரக்கு ரயில் தடம் புரண்டது