காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணைக்கு 90,000 கனஅடி நீர் வருகிறது

மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 90,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதன்படி கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் நுகு அணை ஆகிய 3 அணைகளில் இருந்தும் விநாடிக்கு ஒரு லட்சத்து 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நேற்று 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஐவர்பாணி, மெயின் அருவிகளில் புதுவெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டு கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 55 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில்,  இன்று காலை நிலவரப்படி 90 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று மாலை 72 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 75.83 அடியாக உயர்ந்தது. கடந்த 2 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 34.44 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், நீர்த்தேக்கப் பகுதியில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள கிராம மக்களுக்கும், மீனவர் களுக்கும் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதையடுத்து காவிரி கரையோரம் முகாம் அமைத்துள்ள மீனவர்கள், தங்களின் முகாம்களை காலி செய்து வருகின்றனர். நீர்வரத்தும் திறப்பும் இதேநிலையில் இருந்தால் இன்னும் 7 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: