×

பந்தலூர் அருகே வெள்ளத்தில் சிக்கிய மக்கள் பத்திரமாக மீட்பு

பந்தலூர்: பந்தலூர் அருகே அம்மங்காவு பாலம்வயல் பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை போலீசார் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேவாலாவில் 341 மி.மீ மழையும், பந்தலூரில் 188 மி.மீ மழையும் பதிவாகியது. பந்தலூர் அருகே பொன்னானி ஆற்றில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அம்மங்காவு அருகே பாலம்வயல் பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கி கொண்ட 6 குடும்பங்களை சேர்ந்த 10 பேரை, தேவாலா டிஎஸ்பி அமிர்அகமது தலைமையில் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேல் மற்றும் தனிப்பிரிவு ஏட்டு பிரபாகரன், நீலகிரி நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மிகுந்த போராட்டத்திற்கு பின் மீட்டனர்.

இதேபோல் கொளப்பள்ளி கருத்தாடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் போலீசார் மீட்டனர். அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதும் மழைநீர் சூழ்ந்தது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 45 பேர் கொளப்பள்ளி அரசு பள்ளி முகாமில்  தஞ்சம் புகுந்தனர். அனைத்து நிவாரண முகாம்களையும் பந்தலூர் தாசில்தார் மகேஷ்வரி பார்வையிட்டு அடிப்படை வசதிகளை  செய்து தர வருவாய்துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். நேற்று மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. மேலும் கடந்த நான்கு நாட்களாக பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போட முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சிலர் யுபிஎஸ் பயன்படுத்தும் கடைகளில், ஒரு மணி நேரத்திற்கு ரூ.20 கொடுத்து செல்போன்களை சார்ஜ் செய்கின்றனர்.
மின்சாரம் துண்டிப்பால்  வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பணி முடக்கம் ஏற்பட்டுள்ளது.கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் மழை வெள்ளம் பாதிப்பு பகுதிகளை மேற்கு மண்டலம் டிஐஜி நரேந்திரன் நாயர் பார்வையிட்டார்.அவருடன் நீலகிரி எஸ்பி சசிமோகன் மற்றும் பந்தலூர் டிஎஸ்பி அமிர் அகமது உடனிருந்தனர். ஒரு வாரமாக நீடித்த மழையால் பந்தலூர் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Tags : flood victims ,Pandharpur Safe ,Pandharpur , Pandharpur, floods, people rescue
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தில்...