ஊரடங்கு விதிகளை காற்றில் பறக்கவிட்ட தமிழக மக்கள்..!!! தொற்று அதிகரிக்கும் அபாயம்..!!

சேலம்: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தளர்வில்லா ஊரடங்கிலும் பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சுற்றி வருவது நோய் தொற்றை அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.  தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் 7ம் கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் மாதத்தின் ஒவ்வொரு ஞயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தளர்வில்லா முழு ஊரடங்கான இன்று பொதுமக்கள் வழக்கம்போல் வெளியே சுற்றி திரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டம் முழுவதும் 40 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பல்வேறு காரணங்களை கூறி பொதுமக்கள் வீதிகளில் சுற்றி வருகின்றனர். மேலும் ஆத்தூரிலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்படுகின்றன. சேலத்தில் காலை நேர நிலவரப்படி அவசியமின்றி வெளியே சுற்றியதாக 80 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தருமபுரியில் விதிகளை மீறி சாலையோரங்களில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதற்கிடையில் கள்ளக்குறிச்சியில் ஊரடங்கு விதிகளை மதிக்காமல் மக்கள் வெளியே வழக்கம்போல் சுற்றி திரிகின்றனர்.

அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தர இருப்பதால் தளர்வில்லா ஊரடங்கில் போலீசார் கவனம் செலுத்தவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் மணப்பாறையில் ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகன பதிவெண்களை குறித்து கொண்ட போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எந்த வித அச்சமும் இல்லாமல், ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றி திரிவதால் மேலும் நோய் தொற்று அபாயம் அதிகளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: