மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குழிகள் கண்டுபிடிப்பு!!!

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையாக கற்குழிகள், இரும்பு உலைகள் மற்றும் கற்கால சங்ககால ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மதுரை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் முதுமக்கள் தாழி, பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள், கல்வட்டங்கள், எலும்புகள், விதவிதமான குடுவைகள் உள்ளிட்டவை அதிகளவில் கிடைத்துள்ளதாக அப்பகுதிகள் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மேலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்குழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதாவது நானூத்து பைபத்தி என்ற கிராமத்தில் மலைவார பகுதியில் பழமையான கற்குழிகள், இரும்பு உலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கற்கால ஆயுதங்கள், சங்ககால ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்கள், சுண்ணாம்பு குவியல்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் என பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென தொல்லியல் ஆய்வாளர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையில் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. பண்டைய மனிதர்கள் பயன்படுத்திய பல்வேறு தொன்மையான பொருட்கள் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: