அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யும்..!! வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது. தர்மபுரி, சேலம், தஞ்சாவூர்,  திருவாரூர், நாகை, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ‘வேலூர், திருவள்ளூர்,  திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சாவூர்,  திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், அரியலூர், பெரம்பலூர், மதுரை,  சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழையும் அடுத்த 48 மணி நேரத்தில் இலேசான மழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

ஆகஸ்ட் 09-ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். கேரளா- கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 09,10 தேதிகளில் கேரளா- கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஆகஸ்ட் 13-ம் தேதி லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும்.ஆகஸ்ட் 09,10 தேதிகளில் ஒடிஷா கடலோர பகுதிகள் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 11-ம் தேதி கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு, பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர்  வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 09 முதல் - ஆகஸ்ட் 13 வரை தென் மேற்கு மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும். எனவே, மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: