நீலகிரியில் மழையின் தாக்கம் குறைந்தது-மக்கள் நிம்மதி: சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கன மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கன மழை பெய்து வந்தது. குறிப்பாக, காணப்பட்டது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. அங்கு பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்தன. மழையால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் வீசிய சூறாவளி காற்றினால், மரம் விழுந்து இருவர் பலியாயினர். மூவர் காயமடைந்தனர்.

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சுமார் 200 ஏக்கருக்கு மேலான விவசாய நிலங்கள், வாழைத் தோட்டங்கள் மற்றும் வயல்கள் தண்ணீரில் மூழ்கின. இந்த நிலையில் நேற்று முதல் மழையின் தாக்கம் சற்று  குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். எனினும் அவலாஞ்சி,  நடுவட்டம், கிளன்மார்கன், குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற  பகுதிகளில் லேசான மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய  பகுதிகளில் கன மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால், நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், தமிழக காவல்துறையை சேர்ந்த அதிரடிப்படை, நக்சல்கள் தடுப்புப்பிரிவு மற்றும் ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊட்டி, குந்தா மற்றும் கூடலூர் ஆகிய  பகுதிகளில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி-கூடலூர் சாலையில் விழுந்த 50க்கும் மேற்பட்ட மரங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விழுந்த மரங்களும் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. நேற்றும் ஒரு சில பகுதிகளில் மரங்கள் விழுந்த நிலையில், அதனை தீயணைப்புத்துறையினர் அகற்றினர். மரங்கள் விழுந்து சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மின் சீரமைப்பு பணிகளுக்காக கொடைக்கானலில் இருந்து 41 மின் வாரிய ஊழியர்கள் ஊட்டி வருகின்றனர்.

மழை அளவு

நீலகிரியில் நேற்று பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு: ஊட்டி 8, நடுவட்டம் 82, கிளன்மார்கன் 48, குந்தா 8, அவலாஞ்சி 108, எமரால்டு 16, அப்பர்பவானி 65, கூடலூர் 79, தேவாலா 341. மாவட்டத்தில் மொத்தமாக 1398 மி.மீ. மழையும், சராசரியாக 48 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

தற்காலிக குடியிருப்புகளின் கூரைகள் காற்றில் பறந்தன

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த மழையின்போது  300க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்களும் விழுந்து சேதம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக மீட்கப்பட்டு அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். மேலும், பள்ளிகள் திறந்தவுடன் முகாம்களில் தங்கியிருந்த மக்களை மாற்ற முடியாமல் மாவட்ட நிர்வாகம் திணறியது. இதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ஊட்டி அருகேயுள்ள எமரால்டு பகுதியில் ரூ.2 கோடியில் 120 தற்காலிக வீடுகள் கட்டப்பட்டன.

இந்த வீடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மழை பெய்தால், அங்கு பொதுமக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எமரால்டு பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசிய நிலையில், அந்த குடியிருப்புக்களில் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் 1150 மரங்கள் அகற்றம்

நீலகிரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் கூறுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 1150 மரங்கள் விழுந்தன. இவற்றை தீயணைப்பு வீரர்கள் அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். குடியிருப்புகள் மற்றும் பல்வேறு கட்டிடங்கள் மீது விழுந்த மரங்களையும் அகற்றினர். தற்போது காற்று குறைந்த போதிலும், ஒரு சில இடங்களில் மரங்கள் விழுகின்றன. இந்த மரங்களை அகற்றும் பணிகள் தொடர்–்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளிலும் சாலையோரங்களில் பல மரங்கள் விழும் நிலையில் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாய்ந்து கொண்டிருக்கும் மரங்களை மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் அகற்ற திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories: