×

மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு..!!

சென்னை: மூணாறு நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். கேரளாவில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வருகிறது. இந்த மாவட்டம் பெரும்பாலும்   மலைப்பகுதி என்பதால், நேற்று முன்தினம் இரவு 5க்கும் மேற்பட்ட இடங்களில்  கடும்  நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மண் மூடி, போக்குவரத்து பாதித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மூணாறில் இருந்து 18 கிமீ தொலைவில் உள்ள  ராஜமலை  பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணன் தேவன்  நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் இந்த நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது.

இதில், மேடான நிலையில் இருந்த ஒரு தேயிலை தோட்டம் முழுவதுமாக சரிந்து, தொழிலாளர்களின் வீடுகள் மீது விழுந்தது. இதில், 20 வீடுகளும் மண்ணில் புதைந்தன. வீடுகளில் இருந்த அனைவரும் தூக்கத்திலேயே மண்ணில் புதைந்தனர். இதையடுத்து, தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மண்ணுக்குள் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், நிலச்சரிவில் இருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரித்தது.  இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 80 பேர் வரை இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவில் இறந்தவர்களுள் 10 பேர் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும், மூணாறு பகுதியில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேட்டறிந்த  நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகள் செய்ய தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Tags : Edappadi Palanisamy ,Binarayi Vijayan ,Tamil Nadu ,Chief Minister ,Kerala ,landslide incidents , munaru landslides, Kerala Chief Minister, Binarayi Vijayan, Tamil Nadu Chief Minister, Palanisamy, speech
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்