தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை!: ரூ.44.55 கோடிக்கு மதுபானங்களை விற்று வழக்கம் போல் மதுரை மண்டலம் முதலிடம்.!!!

சென்னை: இன்றைய முழு முடக்கம் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று மட்டும் 189 கோடியே 38 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த வாரம் சனிக்கிழமை 188 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்ற  நிலையில், இந்த வாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடந்த ஜூன் மாதம் முழுவதுமாக கடைபிடிக்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதுமாக எந்தவித தளர்வும் இன்றி கடும்  கட்டுப்பாட்டுடன் முழு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுவதே மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

முழு ஊரடங்கின் போது தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காட்சியளித்தன. இந்நிலையில், இன்று முழு ஊரடங்கு என்பதால் அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது. ஊரடங்கு நாளில் தங்களுக்கு தேவையான மதுபான வகைகளை நேற்றே மதுப்பிரியர்கள் மொத்தமாக வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து, நேற்று எப்போதும் இல்லாத அளவுக்கு 189 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. வழக்கம் போல் மதுரை மண்டலத்தில் 44 கோடியே 55 லட்சம் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது. இதனை போலவே, திருச்சி மண்டலத்தில் 41 கோடி ரூபாயும், சேலத்தில் 41.2 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 39 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: