நெல்லையில் விற்பனையின்றி வெறிச்சோடிய இறைச்சி கடைகள் : மாற்று வேலை தேடும் தொழிலாளர்கள்

நெல்லை: நெல்லையில் விற்பனையின்றி பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகள் வெறிச்சோடுவதால் மாற்று வேலைக்கு தொழிலாளர்கள் செல்ல துவங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு துவக்கத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, பலசரக்கு, இறைச்சி, மீன் கடைகள் மட்டும் காலை 6 மணிக்கு திறந்து மதியம் 2 மணிக்கு அடைக்கப்பட்டு வந்தது. நெல்லை மாநகர பகுதியில் காய்கறி, இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரித்ததால் உழவர் சந்தைகள், காய்கறி மார்க்கெட்டுகள், அந்தந்த மண்டலங்களில் இயங்கி வந்த இறைச்சி, மீன் கடைகள் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இவ்வாறு கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் தங்களிடம் வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்களை இழந்து தவிப்பதாக வியாபாரிகள் புலம்பி தவிக்கின்றனர். இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

மேலும் கால்நடை சந்தைகளும் கடந்த மார்ச் முதல் 5 மாதங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இறைச்சி கடைகளுக்கு ஆடுகள் கிடைப்பதிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆட்டு வியாபாரிகளிடம் நேரடியாக ஆடுகளை வாங்கி வந்து விற்பனை செய்வதாலும், இ-பாஸ் பிரச்னைகளாலும், வாகனங்களில் ஆடுகளை ஏற்றி வருவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் மேலப்பாளையம், பாளை., தச்சநல்லூர், நெல்லை, பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டிறைச்சி வியாபாரிகள் விழிபிதுங்கி காணப்படுகின்றனர். இதுகுறித்து ஆட்டிறைச்சி வியாபாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் சந்தைகள் மூடப்பட்டு ஆடுகள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. மேலும் விற்பனை இல்லாத காரணத்தால் கடைகளில் வேலையாட்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று தொழில் நோக்கி இறைச்சி கடை தொழிலாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்தில் புதன், ஞாயிற்றுக்கிழமைகளில், சில இடங்களில் வெள்ளிக்கிழமைகளில் வியாபாரம் நன்றாக நடக்கும். கடந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் முழு அடைப்பால் விற்பனையின்றி கடும் சிரமப்பட்டு வருகிறோம் என்றனர்.

Related Stories: